வேலூர்,
தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. வேலூர் மாவட்டத்தில் 2 நாடாளுமன்ற தொகுதிகள், 3 சட்டசபை தொகுதிகள் என 5 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அன்றைய தினம் தேர்தல் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே அவர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது.
அதனை தவிர்க்கும் வகையில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி, சோளிங்கர் சட்டசபை இடைத்தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள 751 பேருக்கு வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கில் தபால் வாக்குப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காலை 10.30 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. இப்பணியில் 20-க்கும் மேற்பட்ட தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டிருந்தனர். காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், ஊர்க்காவல்படையினர் விண்ணப்ப படிவங்களில் தங்கள் வாக்குகளை பதிவு செய்து, பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் அதனை போட்டனர்.
தபால் வாக்குப்பதிவை மாவட்ட தேர்தல் அலுவலர் ராமன், தேர்தல் காவல் பொதுபார்வையாளர் குரிந்தர்சிங் திலான் ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். தபால் வாக்குப்பதிவு செய்ய முடியாதவர்கள் பதிவு தபால் மூலம் தங்களது வாக்குகளை பதிவு செய்து 100 சதவீதம் ஜனநாயக கடமையை நிறைவேற்றிட வேண்டும் என்று தேர்தல் அலுவலர் ராமன் கூறினார்.
இன்று (வெள்ளிக்கிழமை) வேலூர் நாடாளுமன்ற தொகுதி, ஆம்பூர், குடியாத்தம் சட்டசபை இடைத்தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர், தீயணைப்பு துறையினர் தபால் வாக்குகளை அளிக்க உள்ளனர். 520 பேர் தபால் வாக்குப்பதிவு செய்தனர் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆய்வின் போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலர் பிரவேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், உதவி கலெக்டர் மெகராஜ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, உதவி கலெக்டர் (பயிற்சி) கிளாட்ஸ்டோன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.