புதுடெல்லி,
நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடை விதிக்கக்கோரி மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அர்ஜூன் கோபால் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு பட்டாசு வெடிப்பதுக்கு நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரத்தை 2 மணி நேரமாக குறைத்தது. புத்தாண்டு, கிறிஸ்துமஸ் ஆகிய தினங்களில் 40 நிமிடம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் எனவும் கட்டுப்பாடு விதித்தது.
மேலும் பேரியம் உப்பு, சல்பர் போன்ற அதிக சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தும் ரசாயன பொருட்கள் இல்லாமல் பசுமை பட்டாசை தயாரிக்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகளை விதித்தும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவில் திருத்தம் கோரி தமிழக அரசும், சில பட்டாசு தயாரிப்பாளர்களும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந்தேதி தலைமை நீதிபதி எஸ்.பாப்டே அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் தயாரிப்பாளர்கள் தரப்பில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தர நிர்ணய மையம் அமைக்க தயாராக இருப்பதாகவும், இது தொடர்பாக மத்திய அரசு ரூ.9 கோடி செலவிட முன்வந்துள்ளதாகவும், தொழிற்சாலைகள் தரப்பில் ரூ.6 கோடி வழங்க தயாராக இருப்பதாகவும் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூரியகாந்த் ஆகியோர் அமர்வில் நடைபெற்றது.
விசாரணை தொடங்கியதும் மனுதாரர் அர்ஜூன் கோபால் தரப்பில் ஆஜரான வக்கீல் கோபால் சங்கரநாராயணன் தடை செய்யப்பட்ட பேரியம் உள்ளிட்ட ரசாயன பொருட்களை கொண்டு தற்போதும் சிவகாசியில் சில பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக கூறி பட்டாசுகள் வைக்கும் சில காலிப்பெட்டிகளை கோர்ட்டில் தாக்கல் செய்தார். அந்த அட்டைப்பெட்டியில் பட்டாசு தயாரிப்பு தேதி குறிப்பிடவில்லை என்றும், தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்கள் பயன்படுத்தியதற்கான சான்று இதில் உள்ளது என்றும் கூறினார். இது தொடர்பாக மனு ஒன்று தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கு பட்டாசு ஆலை தயாரிப்பாளர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் சாயி தீபக் இந்த பட்டாசு தங்கள் தயாரிப்பு அல்ல என்று மறுத்ததோடு, தங்களது பெயரில் ஏராளமான போலி பட்டாசுகள் விற்பனைக்கு மார்க்கெட்டில் வருவதாக கூறினார்.
இதனை தொடர்ந்து சென்னை மண்டல சி.பி.ஐ. இயக்குனர் சிவகாசியில் தயார் செய்யப்படும் பட்டாசுகளில் தடை செய்யப்பட்ட பேரியம் நைட்ரேட் உள்ளிட்ட ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுகிறதா? என்று விசாரணை நடத்தி 6 வாரங்களில் அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறு தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.