அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் கண்காணிப்பு அதிகாரி அறிவுறுத்தல்

அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அறிவுறுத்தினார்.
Published on

அரியலூர்,

அரியலூர் மாவட்ட அனைத்துத்துறை அதிகாரிகளுடன் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு அரியலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சந்தோஷ் கே மிஸ்ரா தலைமை தாங்கினார். அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், சந்தோஷ் கே மிஸ்ரா பேசியதாவது:-

வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளுடன் அனைத்து துறைகளின் சார்பாக மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்தும், வளர்ச்சி திட்டப்பணிகளையும் விரைந்து முடிக்கவும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார். மேலும், அரியலூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பணிகளை துரிதமாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அரியலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சந்தோஷ் கே மிஸ்ரா, கலெக்டர் விஜயலட்சுமியுடன் சென்று அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். சந்தோஷ் கே மிஸ்ரா அஸ்தினாபுரம் கிராமத்திலுள்ள அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு அளிக்கப்படும் பயிற்சி மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர் காட்டுப்பிரிங்கியம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள இ-சேவை மையத்தினையும், உரக்கிடங்கினையும் ஆய்வு செய்தார். பின்னர், நாகமங்கலம் கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மழைப்பயிர்கள் துறையின் சார்பில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் 1 ஹெக்டேர் பரப்பளவில் நிலப்போர்வை மற்றும் நுண்ணீர் பாசனம் மூலம் சம்மங்கி பூ மற்றும் கத்தரி பயிரிடப்பட்டுள்ள நிலத்தினையும் பார்வையிட்டு, விவசாயியிடம் மேற்கண்ட முறைகளை பற்றி மாவட்ட கண்காணிப்பு அதிகாரி கேட்டறிந்தார்.

அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி (பொறுப்பு) சத்தியநாராயணன், திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், திட்ட இயக்குனர் (மகளிர்திட்டம்) லலிதா, துணைப்பதிவாளர் (பொது வினியோகத்திட்டம்) செல்வராஜ், துணை இயக்குனர் (தோட்டக்கலைத்துறை) அன்புராஜன், உதவி இயக்குனர் சரண்யா (தோட்டக்கலைத்துறை) மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com