சாத்தான்குளம் சம்பவத்தில் கைது: ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 2 போலீசார் ஜெயிலில் அடைப்பு - சப்-இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனு மீண்டும் தள்ளிவைப்பு

சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 2 போலீசார் மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
Published on

தூத்துக்குடி,

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தாக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

இந்த வழக்கை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், பால்துரை உள்பட 10 போலீசாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இதில் சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை, போலீஸ்காரர் தாமஸ் பிரான்சிஸ் ஆகியோர் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர்கள் உடல்நிலை குணமடைந்ததால் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதையடுத்து 2 பேரையும் பேரூரணி ஜெயிலுக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை மத்திய ஜெயிலுக்கு கொண்டு சென்று அடைத்தனர்.

இதற்கிடையே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் 2 கொலை வழக்குகளுக்கும் தனித்தனியாக ஜாமீன் கோரி தூத்துக்குடி மாவட்ட முதன்மை கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணை மாவட்ட முதன்மை நீதிபதி லோகேசுவரன் முன்னிலையில் நேற்று முன்தினம் நடந்தது.

இந்த நிலையில் மாவட்ட முதன்மை நீதிபதி லோகேசுவரன் முன்னிலையில் ஜாமீன் மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. காலையில் இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் வக்கீல் ஆஜரானார். ஆனால், சி.பி.ஐ. தரப்பில் வக்கீல் ஆஜராகவில்லை. இதனால் மதியம் 1 மணி வரை விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

மதியம் 1 மணிக்கு பிறகு சி.பி.ஐ. தரப்பில் அரசு வக்கீல் விஜயன் வாட்ஸ்-அப் வீடியோ கால் மூலம் ஆஜராகி வாதாடினார். அப்போது, இந்த வழக்கு மதுரை மாவட்ட தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு உள்ளது. ஆகையால் இந்த கோர்ட்டு எல்லைக்குள் இந்த மனு விசாரணை வராது என்று தெரிவித்தார். இதனால் கோர்ட்டு, அதனை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்க உத்தரவிட்டது. தொடர்ந்து மாலை 3 மணி வரை விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் விசாரணை அதிகாரியிடம் கையெழுத்து பெற முடியாத காரணத்தால் எழுத்துப்பூர்வமாக ஒப்படைக்க முடியவில்லை.

எனவே, வழக்கு விசாரணையை இன்று (புதன்கிழமை) தள்ளிவைக்க வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பு வக்கீல் தெரிவித்தார். அதன்பேரில், இந்த வழக்கு விசாரணை இன்று தள்ளிவைக்கப்பட்டது. மேலும் சப்-இன்ஸ்பெக்டர் பால்துரையின் ஜாமீன் மனு மீதான விசாரணையும் இன்று நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com