

திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐகோர்ட்டு உத்தரவின்படி மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி ஆய்வு மேற்கொண்டார். அப்போது கோவில் ராஜகோபுரம் முன்பு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கடைகள் அமைக்கப்பட்டு இருப்பதை அவர் பார்வையிட்டார். பின்னர் அந்த கடைகளை அகற்ற அவர் கோவில் இணை ஆணையருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மேற்பார்வையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
அந்த இடத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் மலர் செடிகள் வைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் முன்னிலையில் மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி மலர் செடிகளை நட்டு தொடங்கி வைத்தார். இதில் கோவில் அலுவலர் நரசிம்மன், பஞ்சாட்சரம், செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து கோவில் அலுவலர்கள் கூறுகையில், அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தின் முன்பு 100-க்கும் மேற்பட்ட மலர் செடிகள் வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக 25 செடிகள் நடப்பட்டுள்ளது. இதில் செம்பருத்தி, மல்லிகை உள்ளிட்ட மலர் செடிகள் வைக்கப்பட உள்ளது என்றனர்.