கொரோனா வைரஸ் பரவுவதால் மக்களுக்கு குடிநீர் வினியோகத்தை அதிகரிக்க வேண்டும் - ஐகோர்ட்டு அறிவுறுத்தல்

கொரோனா வைரஸ் பரவுவதால், அடிக்கடி கை கழுவ பொதுமக்களுக்கு அதிக அளவில் குடிநீர் வினியோகம் செய்யவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.
Published on

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், சிவமுத்து என்பவர் தாக்கல் செய்த மனுவில், நிலத்தடி நீரை பாதுகாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் வினீத்கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் குடிநீர் ஆலைகளை சீல் வைத்து மூட அரசுக்கு உத்தரவிட்டது.

இதன்படி, மாவட்டந்தோறும் எத்தனை சட்டவிரோத குடிநீர் ஆலைகள் செயல்படுகிறது? என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிக்கை தாக்கல் செய்தனர். சட்டவிரோத ஆலைகளுக்கு சீல் வைத்தனர்.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், குடிநீர் ஆலை உரிமையாளர்கள் பல வழக்குகளை தொடர்ந்தனர். இந்த வழக்குகளை எல்லாம் விசாரித்த நீதிபதிகள், முறையான அனுமதி மற்றும் உரிமம் இல்லாததால் மூடப்பட்ட சட்டவிரோத குடிநீர் நிறுவனங்கள் ரூ.50 ஆயிரம் முன்வைப்புத் தொகையுடன் அரசின் விதிகளைப் பின்பற்றி உரிமம் கோரி விண்ணப்பிக்கலாம்.

குடிநீர் நிறுவனங்களுக்கான உரிமம் பெற்றுள்ள நிறுவனங்களில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உறுதி செய்வது, அவர்கள் எவ்வளவு நீரை எடுத்துள்ளார்கள் என்பதற்கான அளவீட்டுக்கருவியைப் பொருத்துவது மற்றும் ஆலைகளுக்கு அனுமதி வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், நிலத்தடி நீர் எடுக்க உரிமம் கேட்டு 1,054 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. அவற்றில் 690 விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்க தகுதி உடையதாக உள்ளன. ஐகோர்ட்டு உத்தரவின்படி நிலத்தடி நீர் இருப்பு அளவை அறிந்து அதன் அடிப்படையில் உரிமம் வழங்க 3 மாத காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், 3 மாத கால அவகாசம் வழங்க மறுத்து விட்டனர்.

அந்த விண்ணப்பங்களை எல்லாம் 2 வாரங்களுக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். தவறினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும், சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று எச்சரிக்கை விடுத்து உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை வருகிற 30-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள், உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக பொதுமக்கள் தங்கள் கைகளை அடிக்கடி கழுவும்படி அறிவுறுத்தப்படுகிறது. இதற்கு தண்ணீர் அதிகம் வேண்டும். எனவே, குடிநீர் வினியோகத்தை அதிகரிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com