தொற்று பாதிப்பு அதிகரிப்பதால் கல்லூரிகளில் கொரோனா சிகிச்சை மையம் நாராயணசாமி தகவல்

தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையொட்டி கல்லூரிகளில் கொரோனா சிகிச்சை மையமாக்க திட்டமிட்டுள்ளோம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
Published on

புதுச்சேரி,

சுகாதாரத்துறை அதிகாரிகளை அவமரியாதை செய்த கவர்னர் கிரண்பெடியை கண்டித்து சட்டசபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினார்கள். இந்த விவாதத்தின் போது முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

கவர்னரின் செயல்பாடு தொடர்பாக டாக்டர்கள் சங்கத்தினரும் என்னிடம் புகார் அளித்துள்ளனர். கவர்னரின் இந்த செயல்பாடு துரதிஷ்டவசமானது. அவரது நடவடிக்கைகள் எனக்கு வருத்தமளிக்கிறது. கவர்னரின் நடவடிக்கை குறித்து பலமுறை அவருக்கு கடிதம் எழுதியுள்ளேன். விதிமுறைகளை மீறி அதிகாரிகள் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் யாரையும் தூக்கிலிட முடியாது. டாக்டர்கள் தொடர்ந்து களப் பணியாற்றி வருகிறார்கள். இந்த நேரத்தில் கவர்னர் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

எம்.எல்.ஏ.க்களின் கோபம் மற்றும் எண்ணங்களை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. கவர்னர் எல்லை மீறி செயல்படுகிறார். அவரது செயல்பாட்டுக்காக நான் அரசு சார்பில் எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். கவர்னர் அதிகாரிகளை திட்டுவதை தவிர்ப்பது தான் பெருந்தன்மையான செயலாகும்.

இந்த சூழ்நிலையில் மருத்துவப் பணியாளர்களை குறைகூற நமக்கு உரிமை இல்லை. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்காக நாம் கல்லூரிகள் போன்றவற்றை சிகிச்சை அளிக்கும் மையங்களாக மாற்றும் நிலையில் உள்ளோம். தேவைப்பட்டால் பல்கலைக்கழக வளாகத்தை பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற உபகரணங்கள் வாங்குவதிலும் முட்டுக்கட்டை போடுகிறார். எந்த தடை வந்தாலும் நாங்கள் ஒருங்கிணைந்து மக்களுக்காக நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து சபாநாயகர் சிவக்கொழுந்து பேசியதாவது:-
மருத்துவ அதிகாரிகள் மனது புண்படும் வார்த்தைகளை கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார். இந்த காலகட்டத்தில் நாம் டாக்டர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு வருத்தம் ஏற்படுத்தக்கூடாது. எனவே கவர்னர் கிரண்பெடி தான் கூறிய வார்த்தைகளை திரும்ப பெற்று வருத்தம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com