சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி கேட்டு சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்த மீனவர்கள்

சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி கேட்டு சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு மீனவர்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Published on

சிதம்பரம்,

சிதம்பரம் அருகே உள்ள எம்.ஜி.ஆர்.திட்டு, முழுக்குத் துறை உள்ளிட்ட மீனவ கிராம பொதுமக்கள் நேற்று சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்து சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

பின்னர் சப்-கலெக்டர் விசு மகாஜனிடம் மீனவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் நாங்கள் சுருக்குமடிவலையை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்து வருகிறோம், எங்கள் கிராமத்தில் 7 சுருக்குமடி வலையும், முழுக்கு துறையில் ஒரு சுருக்குமடி வலையும் என மொத்தம் 8 சுருக்குமடிவலைகளை பயன்படுத்தி மீன் பிடித்து வாழ்ந்து வருகிறோம். இந்த வலைகள் 2 கிராம மக்களும் சேர்ந்து பெரிய முதலீடு செய்து வாங்கியவை ஆகும்.இந்த வலையால் யாருக்கும் பாதிப்பு இல்லை. மீன்பிடி தொழில் செய்வதற்கு ஒரு வலைக்கு 30 நபர்கள் செல்வார்கள், அதில் விவசாயிகள், தினக்கூலி தொழிலாளிகள் என பல குடும்பங்கள் பலன் பெறுகின்றன. இது எங்கள் வாழ்வாதாரமாக உள்ளது. கடந்த ஆண்டு எங்கள் கிராமத்தை சேர்ந்த ஒரு சுருக்குமடி வலையில் பெட்ரோல் குண்டு வீசி எரித்து சாம்பலாக்கி விட்டார்கள். அதன் மதிப்பு ரூ.85 லட்சம் ஆகும். மேலும் எங்களை சிலர் அச்சுறுத்தி வருகிறார்கள். சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க எங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட சப்- கலெக்டர் விசு மகாஜன் சுருக்குமடி வலையை பயன்படுத்த அரசு தடை செய்துள்ளது. மேலும் அரசு என்ன நடவடிக்கை எடுப்பதாக சொல்லி இருக்கிறதோ அவற்றை நீங்கள் கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து மீனவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com