

வடவள்ளி,
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உதவி பேராசிரியரின் கீழ் ஆராய்ச்சி மாணவி ஒருவர் பணியாற்றி வந்தார். அந்த மாணவி திடீரென கல்லூரிக்கு வரவில்லை. இதற்கிடையில் அந்த மாணவி அந்த துறையில் வேலைபார்க்கும் பெண் ஊழியர்களுக்கு இ-மெயில் புகார் ஒன்றை அனுப்பினார். அதில், அந்த துறையில் பணியாற்றும் உதவி பேராசிரியர் பாலியில் தொந்தரவு கொடுத்ததாகவும், அதனால் தான் கல்லூரிக்கு வரவில்லை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
உடனே அவர்கள் அந்த புகாரை துறை தலைவரிடம் தெரிவித்தனர். அவர், ஆராய்ச்சி மாணவியை இ-மெயில் மூலம் தொடர்பு கொண்டார். அதற்கு அந்த மாணவி, உதவி பேராசிரியர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பதில் அனுப்பினார். இதையடுத்து உதவி பேராசிரியரிடம் துறைத்தலைவர் விளக்கம் கேட்டார்.
அதன் பேரில் உதவி பேராசிரியர் விளக்க கடிதம் கொடுத்தார். அதையும், ஆராய்ச்சி மாணவியின் இ-மெயில் புகாரையும் இணைத்து பல்கலைக்கழக விசாரணை குழுவிடம், துறை தலைவர் வழங்கினார். இது குறித்து பல்கலைக்கழக ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் ஜெயக்குமார் கூறுகையில், இருதரப்பிடமும் விசாரித்து தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.