காவேரிப்பட்டணம் அருகே அரசு பள்ளியில் குடிபோதையில் கிடந்த ஆசிரியர் பணி இடைநீக்கம் முதன்மை கல்வி அதிகாரி நடவடிக்கை

காவேரிப்பட்டணம் அருகே அரசு பள்ளியில் குடிபோதையில் கிடந்த ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்து கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
Published on

காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள பனகமுட்லுவை சேர்ந்தவர் செல்வம் (வயது 45). இவர் கடந்த 12 ஆண்டுகளாக காவேரிப்பட்டணம் அருகில் உள்ள சந்தாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மது குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மாதத்தில் பாதி நாட்கள் பள்ளிக்கு சரியாக வருவதில்லை.

மேலும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கு சரியாக வருவதில்லை என்றும், அடிக்கடி குடித்து விட்டு பள்ளிக்கு வருவதாக கூறியும் செல்வத்திற்கு 6 மாத ஊதிய உயர்வு குறைக்கப்பட்டு, வட்டார கல்வி அலுவலர் மூலம் எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட்டது. ஆனாலும் செல்வம் தொடர்ந்து மது குடித்து விட்டு பள்ளிக்கு சரியாக வருவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது.

இந்த நிலையில், நேற்று காலை ஆசிரியர் செல்வம் பள்ளிக்கு மது குடித்து விட்டு வந்துள்ளார். இதையொட்டி அவர் வகுப்பறையில் குடிபோதையில் விழுந்து கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரியிடம் புகார் அளித்தனர். அவர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டார்.

அதில், ஆசிரியர் செல்வம் மது குடித்துவிட்டு வகுப்பறையில் விழுந்து கிடந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து செல்வத்தை தற்காலிக பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com