

அரியாங்குப்பம்,
அரியாங்குப்பம் பழைய பூரணாங்குப்பம் ரோடு திரவுபதி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் அய்யனார் (வயது 31). மாற்றுத்திறனாளி. தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மாடி வீட்டின் கீழ் தளத்தில் அய்யனார் வசித்து வருகிறார். மேல்தளத்தில் வீட்டின் உரிமையாளர் வசிக்கிறார்.
கடந்த 23-ந் தேதி அய்யனார் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். சிறிது நேரத்தில் அவரது மனைவி தனலட்சுமி, அய்யனாருக்கு போன் செய்து, வீட்டில் ஒருஅறையில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி கொலுசுகளை காணவில்லை என்று தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், வீட்டிற்கு வந்து பல இடங்களில் தேடிப்பார்த்தபோதும், நகைகள் வைத்திருந்த பையை காணவில்லை. மர்ம நபர்கள் யாரோ வீடு புகுந்து நகைகளை திருடிச்சென்றது தெரிய வந்தது.
இது குறித்து அரியாங்குப்பம் போலீசில் அய்யனார் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து துணிகரமாக நகைகளை திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது.