கீரனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், டாக்டர்கள் பற்றாக்குறையால் எட்டாக்கனியான மருத்துவ வசதி

கீரனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையால், பொதுமக்களுக்கு மருத்துவ வசதி எட்டாக்கனியாகி விட்டது.
Published on

கீரனூர்,

பழனி அருகே கீரனூர் பேரூராட்சி அமைந்துள்ளது. இங்கு சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கீரனூர் சுற்றுப்புற கிராம மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காகவும், கல்வி, மருத்துவம் போன்ற வசதிக்காகவும் கீரனூர் வந்து செல்கின்றனர். இங்குள்ள மக்களின் நலனுக்காக ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

ஆனால் கடந்த சில மாதங்களாகவே கீரனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்களுக்கு மருத்துவ வசதி என்பது பொதுமக்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இதற்கு கீரனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய டாக்டர் மற்றும் நர்சு, பணியாளர்கள் இல்லாததே காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கீரனூர் பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

அகமது ரபீக் (சமூக ஆர்வலர்):

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக கீரனூரில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வந்தது. அப்போது கீரனூர் மற்றும் மேல்கரைபட்டி, கல்துறை, பெரிச்சிபாளையம், வேலூர், வெள்ளைகவுண்டன்வலசு, சரவணபட்டி, தொப்பம்பட்டி, ஆலங்குளம் உள்ளிட்ட சுமார் 15 கிராம விவசாயிகள், தொழிலாளிகள் இங்கு சிகிச்சை பெற்று சென்றனர். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனை சுகாதார நிலையமாக தரம் குறைக்கப்பட்டது.

இருப்பினும் இங்கு 25 படுக்கை வசதி கொண்ட உள்நோயாளி பிரிவு செயல்பட்டு வருகிறது. 300 பேர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெறும் வசதி உள்ளது. ஆனால் போதிய டாக்டர்கள் இல்லாததால், தனியார் மருத்துவமனைகளில் பணம் கொடுத்து சிகிச்சை பெற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே போதிய டாக்டர் மற்றும் பணியாளர்களை நியமனம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணி (கூலித்தொழிலாளி):

பொதுவாக ஆரம்ப சுகாதார நிலையம் தான், மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட வேண்டும். ஆனால் கீரனூரில் தலைகீழாக நிலைமை மாறியது. எனினும் சுகாதார நிலையமாக மாற்றப்பட்ட பிறகு அங்கு போதிய வசதிகள் செய்யப்பட்டன. ஆனால் தற்போது அங்கு டாக்டர்கள், நர்சு மற்றும் மருத்துவ பணியாளர்கள் என அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளது. இதேபோல் ஆம்புலன்ஸ் வசதி, ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே உள்ளிட்ட மருத்துவ வசதிகள் இங்கு இல்லை. இதனால் தாராபுரம், பழனிக்கு சிகிச்சைக்காக செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் விபத்து ஏற்பட்டு முதலுதவி சிகிச்சைக்கு வருபவர்களுக்கு சரியான நேரத்தில் மருத்துவ வசதி கிடைக்க முடியாததால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. எனவே அதிகாரிகள் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

சுதா (குடும்பத்தலைவி):

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கீரனூர் மற்றும் சுற்றுப்புற கிராம பெண்களுக்கு கீரனூர் அரசு மருத்துவமனையில் தான் பிரசவம் நடந்தது. ஆனால் தற்போது போதிய டாக்டர்கள், மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் பெரும்பாலான கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக பழனி அல்லது தாராபுரத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் அவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படுகிறது.

இதேபோல் தற்கொலை முயற்சி, விபத்து ஆகியவற்றுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க முடியாமல் பழனிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் போகும் வழியிலேயே உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. ஆகையால் கீரனூர் சுகாதார நிலையத்தில் போதிய டாக்டர்கள், பணியாளர்களை நியமிக்க சம்பந்தப்பட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com