அணைக்கட்டு,
அணைக்கட்டு தாலுகா ஆண்டிக்கொட்டாய் கிராமத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 59-வது ஆண்டாக காளைவிடும் விழா நடந்தது. இதில் ஆந்திரா மாநிலம் மற்றும் வாணியம்பாடி, குடியாத்தம், ஒடுகத்தூர், பள்ளிகொண்டா மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 150-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டன.
காளைகளை கால்நடை மருத்துவர் சுந்தரமூர்த்தி பரிசோதனை செய்தார். அதைத் தொடர்ந்து காளைவிடும் விழாவை உதவி ஆணையர் (கலால்) பூங்கொடி அனுமதியுடன் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கீதா, துணை தாசில்தார் விஜயகுமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதனையடுத்து காளைகள் வாடிவாசல் வழியாக ஒன்றன்பின் ஒன்றதாக சீறிப்பாய்ந்து ஓடின. காளைகள் ஓடும் தெருவின் இருபுறமும் சவுக்கு கட்டைகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்குள்ள கோவில் மீதும் வீடுகளின் மாடிகள் மீதும் அமர்ந்து சீறிப்பாயந்து ஓடிய காளைகளை பார்த்து ரசித்தனர். இளைஞர்கள் காளை ஓடும் தெருவில் நின்றுகொண்டு காளைகளை உற்சாகப்படுத்தினர். அப்போது சில மாடுகள் தெருவில் ஓடாமல் பொதுமக்கள் பக்கமாக ஓடின. அப்போது வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்களை காளைகள் முட்டியதில் 20 பேர் காயம் அடைந்தனர். இதில் பெண் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு காளைவிடும் விழாவில் முகாமிட்டிருந்த ஒடுகத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கைலாஷ் தலைமையில், மருத்துவர்கள் சீனிவாசன், தீபிகா குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
விழாவில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவையொட்டி வருவாய் ஆய்வாளர் முகமது சாதிக், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் காளைவிடும் நிர்வாக குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அணைக்கட்டு, வேப்பங்குப்பம், பள்ளிகொண்டா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக காளைவிடும் விழாவை பார்ப்பதற்காக பெரிய ஊனை கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மகன் அய்யப்பன் (வயது 32) வந்தார். விழாவில் சீறிப்பாய்ந்து ஓடிவந்த மாடு ஒன்று அவரை முட்டுவதுபோல் வந்ததை பார்த்து அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்தவ முகாமிற்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
அணைக்கட்டு அருகே செல்லும் போது அய்யப்பனின் உடல் நிலை மோசமானதை தொடர்ந்து அணைக்கட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் வரும் வழியிலேயே அய்யப்பன் இறந்துவிட்டதாக கூறினர். இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.