பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில், பெண் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் கடும் வாக்குவாதம் - சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில், பெண் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் கடும் வாக்குவாதம் - சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு
Published on

பண்ருட்டி,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுவீரப்பட்டு தெற்கு தெருவை சேர்ந்தவர் பிரபு. இவர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சசிகலா. இவர், தன்னுடைய மாமியார் அல்லி, நாத்தனார் சுகந்தி ஆகியோர் சொத்து பிரச்சினை காரணமாக தன்னை வீட்டை விட்டு துரத்தி விட்டதாக கடந்த 9-ந்தேதி பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்த மனுவை பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் வனஜா இது பற்றி உடனடியாக விசாரணை நடத்தவில்லையாம். இது பற்றி சசிகலா தனது கணவரான சப்-இன்ஸ்பெக்டர் பிரபுவிடம் கூறினார். அவர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனஜாவிடம் செல்போனில் பேசி உள்ளார். பிறகு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனஜா, சசிகலாவிடம் உன்னுடைய கணவர் சப்-இன்ஸ்பெக்டர் என்றால் கொம்பா? முளைத்து உள்ளது என திட்டியதாக தெரிகிறது.

இது பற்றி அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் பிரபு பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்து இன்ஸ்பெக்டர் வனஜாவிடம், எனது மனைவி கொடுத்த புகார் மனுவை ஏன் விசாரிக்கவில்லை என்று கேட்டுள்ளார். இதில் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது 2 பேரும் ஒருமையில் திட்டிக்கொண்டனர்.

அவர்கள் 2 பேரும் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு, இன்ஸ்பெக்டரை பார்த்து நீ என்ன பேசுகிறாய், யாருக்கிட்ட பேசிக்கிட்டிருக்கிற, இன்ஸ்பெக்டர் என்றால், எதுவென்றாலும் பேசுவியா. புகார் கொடுத்தால் விசாரிக்கணும். இல்லை என்றால் புகாரை திருப்பி கொடுங்கள் என்று பேசுகிறார். அதற்கு இன்ஸ்பெக்டர் வனஜா, மனுவை விசாரிக்க முடியாது. புகாரை வாங்கிட்டு போயா என ஆவேசமாக கூறியதுடன், உன்னை கைது செய்து உட்கார வைத்து விடுவேன் என்று மிரட்டுகிறார்.

மேலும் அரைந்து விடுவேன், செருப்பால் அடிப்பேன் எனவும் பேசுகிறார். இந்த வீடியோ வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ கடலூர் மாவட்ட போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com