ஆரணி,
ஆரணியை அடுத்த சேவூர் ஊராட்சியில் உள்ள ஆரணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ரேஷன் கடையில் கடந்த மாதமும், இந்த மாதமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் போன்றவைகளை இலவசமாக வழங்க அரசு உத்தரவிட்டது. மேலும் கொரோனா காலத்திற்காக கடந்த மாதமும் இம்மாதமும் குடும்ப அட்டைகளுக்கு கூடுதலாக நபருக்கு 5 கிலோ வீதம் விலையில்லா அரிசி வழங்க உத்தரவிட்டுள்ளது.
வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே திறக்கப்படும் இந்த ரேஷன் கடையில் நேற்று பொருட்களை வாங்க பொதுமக்கள் வந்தனர். அப்போது விற்பனையாளர் இன்னும் அரிசி வரவில்லை என கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் அரசு அறிவித்து இத்தனை நாட்களாகியும் பொருட்கள் வழங்கவில்லை, கடந்த மாதமும் கூடுதல் அரிசி வழங்கவில்லை எனக்கூறி திடீரென ஆரணி - வேலூர் நெடுஞ்சாலையில் சேவூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார், கூட்டுறவு சங்க செயலாளர் (பொறுப்பு) சரவணன் ஆகியோர் பொருட்கள் வந்ததும் அனைத்து அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என பொதுமக்களிடம் கூறினர். அப்போது பொதுமக்கள் ரேஷன் கடையில் பணிபுரியும் விற்பனையாளரை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் சேவூர் ஊராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் கொரோனா வைரஸ் தொற்று பரவுகிற நிலையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முக கவசங்கள் அணியாமலும் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.