ஏற்காட்டில் கிராமசபை கூட்டத்தில் சலசலப்பு

ஏற்காட்டில் நடந்த கிராமசபை கூட்டத்தில் மின்இணைப்பு தொடர்பான புகாரை பொதுமக்கள் எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது.
Published on

ஏற்காடு,

சேலம் மாவட்டம் ஏற்காடு டவுன் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஏற்காடு ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேஷ் குமார் தலைமை தாங்கினார். அப்போது ஜெரினாக்காடு, முருகன் நகர், எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளதாகவும், கடந்த 8 மாத காலமாக இங்கு கட்டப்படும் வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கப்படுவது கிடையாது என்று கூறியும், அ.தி.மு.க.வை சேர்ந்த அந்தோணி, ரஜினி மக்கள் மன்ற ஒன்றிய செயலாளர் தமிழ்மணி, மக்கள் நீதி மய்யத்தை சேர்ந்த அர்ச்சுணன் ஆகியோர் அதிகாரிகளிடம் கேட்டனர்.

மேலும் மின் வாரியத்தில் இருந்து லைன்மேன் மாதேஷ் வந்திருந்ததால், மின்வாரிய அதிகாரிகள் வந்து விளக்கமளிக்கும் வரை கிராமசபை கூட்டத்தை நிறைவடைய விடமாட்டோம் என பொதுமக்கள் கூறினர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு உண்டானது.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஏற்காடு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அங்கு வந்து பொதுமக்களை சமாதானம் செய்தனர். பின்னர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர், மின்வாரிய அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு இந்த பிரச்சினை குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து நாளை (அதாவது இன்று) இந்த பிரச்சினை குறித்து மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் அளிப்பார்கள் என்று அவர் கூறியதையடுத்து பொதுமக்கள் சமாதானம் அடைந்தனர். தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், ஏற்காடு டவுன் பகுதிகளில் மக்கள் அதிகளவில் நடமாடும், பொது இடங்களில் பன்றிகள் வளர்க்கப்பட்டு வருவதாகவும், அதனை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், பழுதடைந்துள்ள சாலைகள் சரிசெய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com