அத்திவரதர் தரிசன விழா உண்டியல் வசூல் ரூ.5 கோடி

அத்திவரதர் தரிசன விழாவையொட்டி கோவில் உண்டியல்கள் மூலம் ரூ.4 கோடியே 90 லட்சம் வசூலாகி உள்ளது.
Published on

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். முதல் 31 நாட்கள் சயன கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் தற்போது நின்றகோலத்தில் காட்சி தந்து வருகிறார். தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து செல்கின்றனர்.

40-வது நாளான நேற்று அத்திவரதர் நின்ற கோலத்தில் கனகாம்பர நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று முன்தினம் அத்திவரதரை தரிசிக்க காத்திருந்த பக்தர்கள் தரிசன நேரம் முடிந்து விட்டதால் நேற்று தரிசித்தனர். நேற்றுமுன்தினம் பக்தர்கள் செல்வதற்கான வரிசையில் படுத்து தூங்கினர். அத்திவரதரை 7 மணி நேரம் வரை காத்திருந்து தரிசிக்கின்றனர்.

டோனர் பாஸ் நிறுத்தம்

வெளி மாவட்டங்கள் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க காஞ்சீபுரம் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் காஞ்சீபுரம் நகரமே பக்தர்களின் கூட்டத்தால் திக்குமுக்காடியுள்ளது. வருகிற 16-ந்தேதி அத்திவரதரை தரிசனம் செய்ய கடைசி நாளாகும். இன்னும் சில நாட்களே இருப்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் டோனர் பாஸ், மிகவும் முக்கிய நபர்களுக்கான பாஸ் வழங்குவது நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. டோனர் பாஸ் வேண்டி யாரும் அணுக வேண்டாம். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அலுவலகத்தின் முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

1 கோடியை தாண்டும்

வருகிற 16-ந்தேதி வரை அத்திவரதரை தரிசிக்கும் பக்தர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற 17-ந் தேதி அத்திவரதர் சிலை கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படும். அன்று அந்த குளத்தில் தண்ணீர் ஆகம விதிகளின்படி நிரப்பப்படும்.

ஏற்கனவே இந்த குளத்தில் உள்ள தண்ணீர் கோவில் பின்புறத்தில் பொற்றாமரை குளத்தில் நிரப்பப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் நிரப்பப்படும். அத்திவரதரை மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் வைக்கும்போது பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று வேலூர் இந்து சமய அறநிலையத் துறை உயர் அதிகாரி செந்தில் வேலவன் தெரிவித்தார்.

ரூ.4 கோடியே 90 லட்சம்

அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக சிறப்பு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்த உண்டியல்கள் மூலம் கடந்த 37 நாட்களில் ரூ.4 கோடியே 90 லட்சம் வசூலாகி உள்ளது.

நேற்று அத்திவரதரை சபரிமலை அய்யப்பன்கோவில் மேல்சாந்தி மது நம்பூதிரி தரிசனம் செய்தார். அவரை வரதராஜ பெருமாள் கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com