ஆத்தூர் தொகுதியில் 4 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை நிறுத்தம் முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

ஆத்தூர் தொகுதியில் 4 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. கூறினார்.
ஆத்தூர் தொகுதியில் 4 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை நிறுத்தம் முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
Published on

செம்பட்டி,

ஆத்தூர் ஒன்றியத்தின் பல்வேறு கிராமங்களில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பித்தளைப்பட்டி, வக்கம்பட்டி, சீவல்சரகு, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஊராட்சி சபை கூட்டங்கள் நடந்தன. இதற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், தி.மு.க. மாநில துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இ.பெரியசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இளைஞர்களிடம், கல்விக்கடனை செலுத்த வற்புறுத்துகின்றனர். மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைந்தால் தமிழகத்தில் இந்தி வழிக்கல்வி கற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். தி.மு.க. ஆட்சியின்போது பஸ் கட்டணத்தை ஒரு பைசா கருணாநிதி உயர்த்தினார். இதனால், அடுத்து நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 10 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். தற்போது பஸ் கட்டணத்தை 120 சதவீதம் உயர்த்தியுள்ளனர்.

மோடி அரசு விவசாயிகள், ஏழை மக்களை வஞ்சிக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆத்தூரில் மட்டும் 4 ஆயிரம் பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் 41 அரசு டவுன் பஸ்களை நிறுத்தியுள்ளனர். இதன் விளைவை, ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் விரைவில் சந்திக்கும் நிலை உருவாகும்.

ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் குளறுபடிகள் அதிகம். தேசிய ஊரக வேலை திட்டத்தில் சம்பளம் குறைவாக வழங்கப்படுகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. ஆதரவுடன் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும். விவசாயிகளுக்கு வருடத்துக்கு ரூ.6 ஆயிரம் வழங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு ஒரு நாளைக்கு ரூ.17 கிடைக்கும். இதனை வைத்து டீ கூட குடிக்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அவர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில், முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள், ரெட்டியார்சத்திரம் சத்தியமூர்த்தி, ஆத்தூர் கலைச்செல்வி, அம்பாத்துரை ரவி, சீவல்சரகு ஊராட்சி செயலாளர் கிட்டு என்ற கிருஷ்ணமூர்த்தி, சின்னாளபட்டி முன்னாள் நகர செயலாளர் அறிவழகன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com