குயின்ஸ்லெண்ட்,
இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் மோதும் பகல்-இரவு டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லெண்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா பெண்கள் அணி தனது முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய பெண்கள் அணியில் அதிகபட்சமாக தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 127 ரன்கள் குவித்தார்.
இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய பெண்கள் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீராங்கனைகளாக அலிஷா ஹூல்ஸ் மற்றும் பித் மோனி களமிறங்கினர். மோனி 4 ரன்னிலும், ஹூல்ஸ் 29 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்துவந்த கேப்டன் மெக் லேனிங் 38 ரன்னில் ஆட்டமிழந்தார். டஹிலா மெக்ராத் 28 ரன்னில் அவுட் ஆனார்.
இறுதியில் 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. எலிஸ் பெர்ரி 27 ரன்னிலும், அஷ்லிங் ஹார்ட்னெர் 13 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.
முதல் இன்னிங்சில் இந்திய அணியை விட 234 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி உள்ளது. போட்டியில் இன்னும் 2 நாட்களே எஞ்சியுள்ள உள்ள நிலையில் இந்தியா-ஆஸ்திரேலிய பெண்கள் டெஸ்ட் போட்டி டிராவில் முடியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.