லக்னோ,
அயோத்தியில் இருந்த பாபர் மசூதி 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக பா.ஜனதா மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, கல்யாண் சிங், முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 49 பேர் மீது குற்றச்சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வழக்கின் விசாரணை லக்னோவில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த 27 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கு விசாரணை அவ்வப்போது தடைபட்டு வந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமை தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ள நிலையில், பாபர் மசூதி இடிப்பு வழக்கிலும் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 49 பேரில் பலர் தற்போது உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட சிலர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி உள்ளனர். வேறு சிலர் தற்போதும் எம்.பி.க்களாக பதவி வகித்து வருகின்றனர்.