

டாக்கா,
மியான்மரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த வன்முறையின்போது ரோஹிங்கியா சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வங்காளதேசத்தில் அகதிகளாக குடியேறினர். இதில் பலர் அங்கிருந்து படகுகள் மூலம் சட்ட விரோதமாக மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். இவ்வாறு ஆபத்தான முறையில் செல்லும்போது படகுகள் கவிழ்ந்து உயிரிழப்பும் நிகழ்ந்து வருகின்றன.
இப்படி ரோஹிங்கியா அகதிகளை மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு சட்ட விரோதமாக அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் பல்வேறு ரவுடிகள் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய ஆள்கடத்தல் மட்டுமின்றி, போதைப்பொருள் கடத்தலிலும் இந்த ரவுடிகள் இறங்கி உள்ளனர். இவர்களுக்கு எதிராக போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தென்கிழக்கு வங்காளதேசத்தில் இத்தகைய சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த ரோஹிங்கியா சமூகத்தைச் சேர்ந்த ஜோகிர் என்பவரின் கும்பலுக்கும், வங்காளதேச சிறப்பு அதிரடிப் படையினருக்கும் இடையே நேற்று துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் வங்காளதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.