ஜம்மு,
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு, மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என மத்திய அரசு திங்கட்கிழமை அறிவித்தது. இதைத்தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகள் தொடர்ந்தது. ஜம்மு மாவட்டத்தில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோல பல்வேறு பள்ளிகள் மற்றும் ஜம்மு பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. தேர்வுகளுக்கான புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஜம்மு பிராந்தியத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 40 கம்பெனி மத்திய போலீஸ் படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். பல பகுதிகளில் ராணுவ வீரர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். செல்போன் இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரிலும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் சில தொலைபேசி மற்றும் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது முதல் தற்போது வரை அங்கு பெரிய அளவில் வன்முறை சம்பவம் எதுவும் நிகழவில்லை. அதேநேரத்தில், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பஃப்லியஸ் பகுதியில், அரசின் நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது, போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் போலீஸ் அதிகாரி ஒருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. ஜம்மு பிராந்தியத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள் 3-வது நாளாக விடுமுறை விடப்பட்டுள்ளன.
சட்டப்பிரிவு 370-வது ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கார்கில் டவுனில் முழு அடைப்பு நடைபெற்றது. குல்காம் பகுதியில் வசிக்கும் ரதன் லால் ஸூட்ஷி என்பவர் கூறும் போது, நிலைமை இயல்பாக உள்ளதாகவும், ஸ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலையில் போக்குவரத்து வழக்கம் போல் உள்ளது எனவும் கூறினார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் 100-க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.