பூந்தமல்லி,
காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அம்பாள் நகர், குபேரன் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). கனரக வாகனங்களுக்கு உபயோகப்படுத்தப்படும் பேட்டரிகளை பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு பேட்டரியில் சார்ஜ் ஏற்றி இயக்கப்படும் மொபட் ஒன்றை வாங்கினார். நேற்று வீட்டின் முன்பகுதியில் புதிதாக வாங்கிய மொபட்டை சார்ஜ் போட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அந்த மொபட் வெடித்து சிதறி தீப்பிடித்தது. சத்தம் கேட்டதும் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்து பார்த்தனர்.
அப்போது அந்த மொபட் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. அங்கு இருந்தவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் வருவதற்குள் அவர்களே போராடி தீயை அணைத்தனர். இதில் மொபட் தீயில் எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தது. இந்த தீ விபத்தில் வீட்டின் சுவர் பகுதி புகை படிந்து கருமையானது. மின்சார வயர்கள், சுவிட்ச் பாக்ஸ் என அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது.
இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மொபட் வெடித்து சிதறி தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் இந்த பகுதியில் காலை முதலே குறைந்த அழுத்தம் கொண்ட மின்சாரம் வந்ததாக கூறப்படுகிறது இதன் காரணமாக மொபட் வெடித்து சிதறி தீப்பிடித்து எரிந்ததா? அல்லது மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. சார்ஜ் ஏற்றும்போது பேட்டரியில் இயங்கும் மொபட் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.