அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி: துணை முதல்-மந்திரி பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கம்

ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டை துணை முதல்-மந்திரி பதவியில் இருந்து கட்சி மேலிடம் நீக்கியது. இதனால் மாநில காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
Published on

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் சட்டசபைக்கு கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. 200 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் காங்கிரசுக்கு 107 உறுப்பினர்களும், பா.ஜனதாவுக்கு 72 உறுப்பினர்களும் உள்ளனர்.

இதைத்தவிர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பாரதிய பழங்குடி கட்சிகளின் தலா 2 உறுப்பினர்கள், ராஷ்ட்ரீய லோக்தளம் உறுப்பினர் ஒருவரும் காங்கிரஸ் அரசை ஆதரித்தனர். 13 சுயேச்சைகளும் காங்கிரசுக்கு ஆதரவு வழங்கினர்.

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தபோதே அங்கு முதல்-மந்திரி பதவியை பெறுவதற்கு முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட், மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையே போட்டி நிலவியது. இதில் கட்சித்தலைமை தலையிட்டு அசோக் கெலாட்டை முதல்-மந்திரியாக்கியதுடன், பைலட்டுக்கு துணை முதல்-மந்திரி பதவியையும் வழங்கியது.

அப்போது இந்த மோதல் முடிவுக்கு வந்தாலும் தொடர்ந்து இருவருக்கும் இடையே அதிகார மோதல் நீடித்து வந்தது.

இந்த மோதலை பயன்படுத்தி மாநில அரசை கவிழ்க்க பா.ஜனதா முயன்றதாக அங்கு புகார் கிளம்பியது. குறிப்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி மாநில அரசை கவிழ்க்க முயன்றதாக கடந்த 10-ந்தேதி 2 பேரை மாநில போலீஸ் சிறப்பு நடவடிக்கைக்குழுவினர் கைது செய்தனர்.

பின்னர் இந்த விவகாரத்தில் தங்கள் வாக்குமூலத்தை அளிக்குமாறு முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி மற்றும் சில எம்.எல்.ஏ.க் களுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். இது சச்சின் பைலட் தரப்பை கோபத்துக்குள்ளாக்கியது.

இதைத்தொடர்ந்து முதல்-மந்திரிக்கு எதிராக வெளிப்படையாக போர்க்கொடி தூக்கிய அவர், தனக்கு 30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும், கெலாட் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும் கடந்த 12-ந்தேதி அறிவித்தார். இது காங்கிரசில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் காங்கிரஸ் சட்டமன்றக்குழு கூட்டத்தை முதல்-மந்திரி தனது வீட்டில் நேற்று முன்தினம் நடத்தினார். இதில் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என கொறடா உத்தரவு போடப்பட்டு இருந்தது. எனினும் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் என 18 பேர் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில், காங்கிரசை ஆதரிக்கும் பிற கட்சி மற்றும் சுயேச்சை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதில், மாநில அரசுக்கு எதிராக நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடும் கட்சி நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டது.

பின்னர் கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முதல்-மந்திரி அசோக் கெலாட் அனைவரும் ஜெய்ப்பூர் அருகே உள்ள ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

இதற்கிடையே முதல்-மந்திரிக்கு எதிராக பைலட்டின் மோதல் வெடித்ததும், காங்கிரஸ் மேலிட தலைவர்கள் பலர் ராஜஸ்தானுக்கு விரைந்தனர். அவர்கள் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் மேற்கொள்ள முயன்றனர்.

இதைப்போல டெல்லியில் முகாமிட்டு இருக்கும் சச்சின் பைலட்டிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. குறிப்பாக கட்சி தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா மற்றும் மூத்த தலைவர்கள் பலர் தொடர்ந்து அவரிடம் சமரசம் பேசினர்.

ஆனால் கட்சித்தலைமையின் சமரசத்தை ஏற்க சச்சின் பைலட் மறுத்தார். இந்த நிலையில் காங்கிரஸ் சட்டமன்றக்குழு கூட்டம் நேற்று மீண்டும் நடந்தது. நேற்றைய கூட்டத்திலும் சச்சின் பைலட்டும், அவரது ஆதரவாளர்களும் பங்கேற்கவில்லை.

பதவிகள் பறிப்பு

சச்சின் பைலட்டும், அவரது ஆதரவாளர்களும் நேற்றைய கூட்டத்திலும் பங்கேற்காததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கட்சித்தலைமை முடிவு செய்தது. அதன்படி அவரது துணை முதல்-மந்திரி பதவி பறிக்கப்பட்டது. மேலும் மாநில தலைவர் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். அவரது ஆதரவு மந்திரிகளான விஸ்வேந்திர சிங், ரமேஷ் மீனா ஆகியோரும் நீக்கப்பட்டனர்.

சச்சின் பைலட்டுக்கு பதிலாக கல்வி மந்திரி கோவிந்த் சிங் தோதசரா, மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். இதைப்போல பைலட்டின் ஆதரவாளர்களிடம் இருந்த கட்சி பதவிகளும் பறிக்கப்பட்டன. அதன்படி இளைஞர் காங்கிரஸ் தலைவராக கணேஷ் கோக்ரா எம்.எல்.ஏ., மாநில காங்கிரஸ் சேவாதள தலைவராக ஹேம்சிங் செகாவத் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.

இந்த தகவல்களை கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா அறிவித்தார்.

அசோக் கெலாட் விளக்கம்

காங்கிரஸ் சட்டமன்றக்குழு கூட்டம் முடிந்ததும் மாநில கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்த முதல்-மந்திரி அசோக் கெலாட், சச்சின் பைலட் மற்றும் 2 மந்திரிகள் நீக்கப்பட்ட விவகாரத்தை அவரிடம் எடுத்துரைத்தார்.

முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் பாசம் மற்றும் ஆசிர்வாதத்தை பெற்றிருந்த பைலட் அதன் மூலம் இளம் வயதிலேயே அரசியல் அதிகாரங்களை பெற்றிருந்தார். ஆனால் இன்னும் அவரும், பிற மந்திரிகளும் இணைந்து காங்கிரஸ் அரசை கவிழ்க்க முயல்கின்றனர். பா.ஜனதாவின் சதியில் விழுந்து விட்டனர். இது எந்த கட்சியும் ஏற்க முடியாதது. எனவேதான் கடினமான இதயத்துடன் இந்த முடிவை காங்கிரஸ் எடுத்துள்ளது என்று கூறினார்.

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும், துணை முதல்-மந்திரி பதவியில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்ட நடவடிக்கை ராஜஸ்தான் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள காங்கிரசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே ராஜஸ்தான் காங்கிரசில் நிலவும் கோஷ்டி பூசல் முடிவுக்கு வரும் வரையில் இருதரப்பையும் ஆதரிக்காமல் நடுநிலை வகிப்பது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் பாரதிய பழங்குடி கட்சிகள் முடிவு செய்துள்ளன. இவ்வாறு அடுத்தடுத்து அரங்கேறும் திருப்பங்களால் மாநில அரசு உச்சக்கட்ட நெருக்கடியில் உள்ளது.

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சச்சின் பைலட் பா.ஜனதாவில் இணையப்போவதாகவும், இதற்காக சில தலைவர்களுடன் அவர் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தனது பதவிகள் பறிக்கப்பட்ட பின், தனது டுவிட்டர் தளத்தில் பதிவு ஒன்றை சச்சின் பைலட் போட்டிருந்தார்.

அதில் அவர், உண்மைக்கு சோதனைகள் வரலாம், ஆனால் தோற்கடிக்க முடியாது என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் தனது டுவிட்டர் தளத்தில் தனது பெயருடன் போடப்பட்டிருந்த (துணை முதல்-மந்திரி, காங்கிரஸ் தலைவர்) பதவிகளையும் நீக்கி விட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com