குடும்ப பிரச்சினை காரணமாக விபரீதம்: பெண் தூக்குப்போட்டு தற்கொலை சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசில் புகார்

திருவள்ளூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை போலீசில் புகார் செய்தார்.
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள சிற்றம்பாக்கம் தோப்பு காலனியை சேர்ந்தவர் எட்டியப்பன் (வயது 35). இவர் மீன் மற்றும் ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் எட்டியப்பன் காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த பள்ள மொளச்சூர் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சோனியா (30) என்ற பெண்ணை கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை பிறந்தது. இவர்களுக்கு 3 வயதில் ராஜேந்திரன் என்ற ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மனவேதனை அடைந்த சோனியா தன் வீட்டில் உள்ள அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், சோனியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிற்றம்பாக்கம் கிராமத்திற்கு விரைந்து வந்து இறந்த சோனியாவின் உடலை கண்டு கதறி அழுதனர்.

இச்சம்பவம் குறித்து சோனியாவின் தந்தையான கிருஷ்ணன் (60) என்பவர் தன் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் சாவுக்கு காரணமான மருமகன் எட்டியப்பன், அவரது தந்தை கங்கன் மற்றும் ரவி ஆகிய 3 பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார்.

இதைத்தொடர்ந்து கடம்பத்தூர் போலீசார் மேற்கண்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com