

மெஞ்ஞானபுரம்,
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே பிள்ளைவிளையைச் சேர்ந்தவர் தனபால். இவருடைய மனைவி வசந்தி (வயது 57). இவர் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
நேற்று முன்தினம் மாலையில் வசந்தி தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அந்த வழியாக டிப்-டாப் உடை அணிந்த 2 மர்மநபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள், வசந்தியிடம் முகவரி கேட்பது போன்று நைசாக பேச்சு கொடுத்தனர். பின்னர் அவர்கள், வசந்தியிடம் குடிக்க தண்ணீர் தருமாறு கேட்டனர்.
உடனே வசந்தி வீட்டுக்குள் சென்று தண்ணீர் எடுத்து வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்த 2 மர்மநபர்களில் ஒருவர் நைசாக வசந்தியை பின்தொடர்ந்து அவரது வீட்டுக்குள் சென்றார். பின்னர் அவர், வசந்தி கழுத்தில் அணிந்து இருந்த நகையை பறித்தார். அப்போது அது கவரிங் நகை என்பது தெரியவந்தது. அதே நேரத்தில் வசந்தி, திருடன்... திருடன்... என்று கூச்சலிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர், வசந்தியை தாக்கி, அவரது கழுத்தை பிடித்து இழுத்து, அங்குள்ள தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்தார். இதற்கிடையே அங்கு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்ததால், வசந்தியை விட்டு விட்டு, அந்த நபர் வெளியே ஓடி வந்தார். பின்னர் அந்த 2 மர்மநபர்களும் மோட்டார் சைக்கிளில் ஏறி, மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.
இதில் காயம் அடைந்த வசந்தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாசரேத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், மெஞ்ஞானபுரம் போலீசார் விசாரணை நடத்தி, அந்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.