வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் அடுத்த கொண்டமங்கலம் கிராமத்தில் மறைமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் அந்த கிராமத்தில் உள்ள பெண்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் செல்வத்தை பார்த்து எங்கள் கிராமத்தில் குடியிருப்பு பகுதி வழியாக பூமிக்கு அடியில் ஏன் மின்சார வயர் புதைக்கின்றனர். இதனால் எங்களுக்கு பிற்காலத்தில் பல பாதிப்புக்கள் உருவாகும், வேண்டும் என்றால் வனப்பகுதி வழியாக பூமிக்கு அடியில் மின்சார வயர் புதைத்து கொள்ளுங்கள் என்று கூறி மறைமலைநகர் இன்ஸ்பெக்டரிடம் எதிர்ப்பு தெரிவித்து கடும் வாக்குவாதத்தில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர்.
அப்போது போலீசாரும் அந்த பெண்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இந்த சம்பவத்தை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார்.
கொண்டமங்கலம் கிராம பெண்கள் மற்றும் மறைமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சிகள் போலீசார் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மறைமலைநகர் மின்சார வாரிய இளநிலை பொறியாளர் ரமேஷ் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் வீராபுரத்தில் இருந்து கோவிந்தாபுரம் பகுதிக்கு கொண்டமங்கலம் வழியாக பூமிக்கடியில் மின் வயர் புதைக்கும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த சில பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து எங்களது பணியை செய்யவிடாமல் தடுத்து தரக்குறைவாக பேசினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகாரில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து மறைமலைநகர் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.