கொரோனாவால் தத்தளித்து, ஊரடங்கில் முடங்கி, வெள்ள நீரில் மிதந்து தவிக்கும் பீகார்...

பீகாரில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1,820 ஆக இன்று பதிவாகி உள்ளது.
Published on

பாட்னா,

பீகாரில் முதல் மந்திரி நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள ஆட்சி நடந்து வருகிறது. பீகாரில் கொரோனா பாதிப்புகள் சமீப நாட்களாக அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் முதல் மந்திரியின் உறவினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதனால், முதல் மந்திரி நிதீஷ் குமார் தனது அலுவலக இல்லத்திலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். பீகாரில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்த நிலையில், கடந்த 16ந்தேதி முதல் 16 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் வரும் 31ந்தேதி வரை பீகாரில் ஊரடங்கு அமலில் இருக்கும்.

எனினும், அனைத்து அத்தியாவசிய சேவைகளும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ரெயில், விமானம், வங்கிகள், மருத்துவமனைகள், விவசாயம் மற்றும் கட்டுமானம் தொடர்புடைய பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.

பீகாரில் வருகிற அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு தயாராகும் பணிகளிலும் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. எனினும், கொரோனா பாதிப்புகளால், பீகார் (வால்மீகி நகர்) தொகுதிக்கான இடைத்தேர்தலை வருகிற செப்டம்பர் 7ந்தேதி வரை இந்திய தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க அரசு நிர்வாகத்திற்கு கூடுதல் சுமையாக கனமழை பாதிப்பும் சேர்ந்து கொண்டது. நாட்டின் வடபகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால், டெல்லி, அசாம், பீகார் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டு மக்களின் நிலைமை வெகுவாக பாதிப்படைந்து உள்ளது.

பீகாரில் பெய்த தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு 7.65 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலரது வீடுகள் வெள்ள நீரால் சூழப்பட்டு உள்ளன. பலர் இருப்பிடங்களையும், கால்நடைகளையும் இழந்துள்ளனர். 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

தேசிய பேரிடர் பொறுப்பு படை மற்றும் மாநில பேரிடர் பொறுப்பு படை ஆகியவற்றை சேர்ந்த 21 குழுக்கள் இணைந்து வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. எனினும், சில பகுதிகளில் வீடுகள் தண்ணீரில் மூழ்கி விட்டன. இதனால் பாதுகாப்புமிக்க பகுதிகளை நோக்கி மக்கள் சென்று தஞ்சமடைந்து வருகின்றனர்.

வெள்ள பாதிப்புகளுக்கு இடையே, பீகாரில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1,820 ஆக இன்று பதிவாகி உள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,511 ஆக உயர்ந்து உள்ளது என சுகாதார துறை தெரிவித்து உள்ளது. இதனால், கொரோனா பாதிப்பு, ஊரடங்கு மற்றும் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு என பீகார் பல முனைகளில் இருந்தும் சோதனைகளை சந்தித்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com