மும்பை,
மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ள நிலையில், புதிய ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்து வரும் சிவசேனா, தனக்கு முதல்-மந்திரி பதவி தர மறுத்த பாரதீய ஜனதாவை கடுமையாக சாடி வருகிறது.
இந்தநிலையில், பாரதீய ஜனதாவை அந்த கட்சி இஸ்லாமிய படையெடுப்பாளர் முகமது கோரியுடன் ஒப்பிட்டு தாக்கி உள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சிக்கு அடித்தளமிட்டவராக கூறப்படும் முகமது கோரி இந்து மன்னர் பிரிதிவிராஜ் சவுகான் மீது பலமுறை போர் தொடுத்தார். ஆனால் பிரிதிவிராஜ் சவுகான் போரில் வென்ற போதும், முகமது கோரியை எதுவும் செய்யாமல் விட்டார்.
ஆனால் முகமது கோரி போரில் வெற்றி பெற்ற போது அவர் பிரிதிவிராஜ் சவுகானை கொன்றார்.
மராட்டியத்தில் கூட சிவசேனா இதுபோன்ற நன்றியற்றவர்களை பலமுறை காப்பாற்றியுள்ளது. இப்போது அவர்கள் எங்களை முதுகில் குத்த முயற்சிக்கின்றனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் எதுவும் நடைபெறாத போது எங்கள் இருக்கையை மாற்றுவதை யார் முடிவு செய்தார்கள்.
முன்னர் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக எல்.கே.அத்வானியும், ஒருங்கிணைப்பாளராக ஜார்ஜ் பெர்னாண்டசும் இருந்தனர். இன்று அந்த கூட்டணியின் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் யார்?
சிவசேனாவை எதிர்க்கட்சி வரிசையில் அமர வைக்கும் இந்த முடிவு பால்தாக்கரேயின் 7-ம் ஆண்டு நினைவு நாளன்று எடுக்கப்பட்டு உள்ளது. இந்த அவசரம் நிச்சயமாக கடுமையான பின்விளைவுகளை உண்டாக்கும். இது ஆணவ அரசியலின் முடிவின் ஆரம்பம். எங்களுக்கு சவால் விட்டால் உங்களை நாங்கள் வேரோடு பிடுங்கி விடுவோம்.
தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்க பாரதீய ஜனதாவை சிவசேனா ஆதரித்த போது, அந்த கட்சி தலைவர்கள் குழந்தைகளாக இருந்து இருப்பார்கள்.
காஷ்மீரில் மெகபூபா முப்தியுடன் கூட்டணி அமைப்பதற்கும், பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்த நிதிஷ்குமாருடன் கைகோர்ப்பதற்கு பாரதீய ஜனதா தேசிய ஜனநாயக கூட்டணியிடம் அனுமதி கேட்டதா? இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.