லாலு வீட்டில் சிபிஐ சோதனை, அரசுக்கும், பா.ஜனதாவுக்கும் தொடர்பு கிடையாது வெங்கையா நாயுடு

லாலு, அவருடைய குடும்பத்தாருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனையில் ஈடுபட்டதற்கு எங்களுக்கு தொடர்பு கிடையாது என வெங்கையா கூறிஉள்ளார்.
லாலு வீட்டில் சிபிஐ சோதனை, அரசுக்கும், பா.ஜனதாவுக்கும் தொடர்பு கிடையாது வெங்கையா நாயுடு
Published on

புதுடெல்லி,

ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்த போது ஓட்டல்களுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டி வழக்குப்பதிவு செய்து 12 இடங்களியில் சிபிஐ சோதனையில் ஈடுபட்டு உள்ளது. பீகார் மாநிலம் பாட்னா, டெல்லி, அரியானா மாநிலம் குர்கான், ஒடிசா மாநிலம் பூரி மற்றும் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி உள்பட 12 இடங்களில் காலை 7 மணியளவில் தொடங்கிய சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாட்னாவில் லாலுவின் வீட்டிலும் சோதனை நடந்தது.

ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் பூர்வே பேசுகையில், சிபிஐ சோதனை சதிதிட்டமாகும், அரசியல் பழிவாங்கும் செயலாகும். பீகார் மாநிலத்தில் மகா கூட்டணி பலமாக உள்ளது என்றார். எதிர்க்கட்சிகள் சிபிஐ சோதனையை விமர்சிக்க தொடங்கிய நிலையில் மத்திய மந்திரி சிபிஐ தன்னுடைய பணியை செய்கிறது என கூறிஉள்ளார்.

மத்திய மந்திரி வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில், லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவருடைய குடும்பத்தார் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தும் விவகாரத்தில் மத்திய அரசுக்கும், பாரதீய ஜனதாவிற்கும் எந்தஒரு தொடர்பும் கிடையாது. சிபிஐ தன்னுடைய பணியை செய்கிறது. சட்டம் வழங்கிய எல்லைக்கு உட்பட்டு சிபிஐ சோதனையில் ஈடுபட்டு உள்ளது என்று கூறிஉள்ளார். இதற்கிடையே பீகார் மாநில முதல்-அமைச்சர் நிதிஷ் குமார் மூத்த அதிகாரிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளார்.

லாலு பிரசாத் யாதவ் கூறுகையில், டெண்டர் வழங்கப்பட்டதில் எந்தஒரு முறைகேடும் நடைபெறவில்லை, இது பாரதீய ஜனதாவின் சதிசெயலாகும். நானும், என்னுடைய கட்சியும் இதுபோன்ற நடவடிக்கைக்கு பணியாது, என கூறிஉள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com