குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக கர்நாடக சட்டசபையில் நாளை தீர்மானம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக கர்நாடக சட்டசபையில் நாளை தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது.
Published on

பெங்களூரு,

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் வசித்து வந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சி இனத்தினர், கிறிஸ்தவர்கள் ஆகிய சிறுபான்மையினர் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவிற்கு வந்து 6 ஆண்டுகள் வசித்தால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தத்தை கொண்டு வந்துள்ளது.

இந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக உத்தரபிரதேச மாநிலம் சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதேவேளையில் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் பா.ஜனதா ஆளும் மாநிலமான கர்நாடக சட்டசபையில் இந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்ற அக்கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) பெங்களூரு விதான சவுதாவில் தொடங்குகிறது. வருகிற 5-ந் தேதி 2020-21-ம் ஆண்டுக்கான கர்நாடக அரசின் பட்ஜெட் அதாவது நிதி நிலை அறிக்கை (வரவு-செலவு திட்டம்) தாக்கல் செய்யப்படுகிறது. நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-மந்திரி எடியூரப்பா இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய தயாராகியுள்ளார். அவர் தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட்டில் விவசாயிகளின் நலனை கருதி தனியாக விவசாய பட்ஜெட்டை எடியூரப்பா தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது.

அதற்கு முன்பு, கர்நாடக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவான தீர்மானத்தை கொண்டுவர ஆளும் பா.ஜனதா முடிவு செய்துள்ளது. இந்த தீர்மானம் நாளை (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றன. அதனால் சட்டசபையில் பா.ஜனதா கொண்டு வரும் குடியுரிமை திருத்த சட்ட தீர்மானத்தை எதிர்த்து அக்கட்சிகள் போராட்டம் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சட்டசபையில் பரபரப்பான காட்சிகள் அரங்கேற வாய்ப்புள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com