கூட்டணி கட்சிகள் வெளியேறினால் சிவசேனா அரசை பா.ஜனதா ஆதரிக்கும்; முன்னாள் மந்திரி பேட்டி

முஸ்லிம் இடஒதுக்கீடு பிரச்சினையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறினால் சிவசேனா அரசை பா.ஜனதா ஆதரிக்கும் என்று முன்னாள் மந்திரி சுதீர் முங்கண்டிவார் கூறினார்.
கூட்டணி கட்சிகள் வெளியேறினால் சிவசேனா அரசை பா.ஜனதா ஆதரிக்கும்; முன்னாள் மந்திரி பேட்டி
Published on

மும்பை,

மராட்டியத்தில் கல்வியில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசு முடிவு செய்து உள்ளதாக தேசியவாத காங்கிரஸ் மந்திரி நவாப் மாலிக் மேல்-சபையில் அறிவித்து இருந்த நிலையில், அது தொடர்பாக எந்த திட்டமும் இல்லை என நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்தார். இந்த பிரச்சினையில் சிவசேனா கூட்டணி அரசில் இருந்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் வெளியேறினால் சிவசேனாவை ஆதரிப்போம் என பாரதீய ஜனதா தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் முன்னாள் மந்திரி சுதீர் முங்கண்டிவார் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சிவசேனா எடுத்த நிலைப்பாடு சரியானது, அவர்கள் அரசியலமைப்பை பற்றி பேசுகிறார்கள். மதத்தின் அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அரசியலமைப்பு வழங்கவில்லை. மதத்தின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றால் சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் செய்த குற்றம் என்ன?

முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் உள்ளடக்கிய பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினருக்கு மத்திய அரசு ஏற்கனவே 10 சதவீத ஒதுக்கீட்டை உருவாக்கி உள்ளது. உத்தவ் தாக்கரே ஒரு நல்ல நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். சிவசேனா உடனான எங்கள் கூட்டணி சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டு இருந்தது. காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் அழுத்தம் கொடுத்தால் சிவசேனா கவலைப்பட கூடாது.

அவர்கள் கூட்டணியை விட்டு வெளியேறினாலும், இந்த விஷயத்தில் நாங்கள் சிவசேனா அரசை ஆதரிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com