

பெங்களூரு,
கர்நாடகத்தில் வருமான வரித்துறையினர், சிறிய நீர்ப்பாசனத்துறை மந்திரி சி.எஸ்.புட்டராஜூ மற்றும் ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர். இதை கண்டித்து முதல்-மந்திரி குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள், வருமான வரித்துறை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர்.
அதிகாரிகளின் பணியை தடுக்கும் வகையில் வருமான வரித்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய முதல்-மந்திரி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் கவர்னர் வஜூபாய் வாலாவை பெங்களூரு ராஜ்பவனில் நேற்று பா.ஜனதாவை சோந்த ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. தலைமையிலான குழுவினர் நேரில் சந்தித்து பேசினர்.
அப்போது அவர்கள், வருமான வரித்துறை சோதனைகளை தடுக்கும் வகையில் முதல்-மந்திரி குமாரசாமி செயல்படுவதாகவும், மாநில அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் கூறி கவர்னரிடம் மனு கொடுத்தனர்.
இது தொடர்பாக முதல்-மந்திரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.