

புதுடெல்லி,
ஒப்புகை சீட்டுகளை எண்ணுவது தொடர்பான எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் கமிஷன் நிராகரித்ததை ஜனநாயகத்துக்கு கருப்பு நாள் என்று காங்கிரஸ் கட்சி வர்ணித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியதாவது:-
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரிப்பதற்கு தேர்தல் கமிஷன் காரணம் சொல்லி இருக்க வேண்டும். ஆனால், காரணம் சொல்லாததால், தனது நம்பகத்தன்மையை கேள்வி கேட்பதற்கான களத்தை தேர்தல் கமிஷன் தயார் செய்து விட்டதாகவே அர்த்தம். முதலிலேயே எண்ணுவதற்கு தேர்தல் கமிஷன் விதி 56டி குறுக்கே வராது. அப்படி இருந்தும், தேர்தல் கமிஷன் ஏன் செய்ய மறுக்கிறது? தேர்தல் கமிஷன் நிராகரித்த செயல், ஜனநாயகத்துக்கு கருப்பு நாள் ஆகும்.
75 சதவீத வாக்காளர்களின் பிரதிநிதிகளாக நாங்கள் விடுத்த கோரிக்கையை தேர்தல் கமிஷன் நிராகரித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பா.ஜனதாவுக்கான மின்னணு வெற்றி எந்திரங்களாக உருவாக்கி இருக்கிறதோ? இவ்வாறு அவர் கூறினார்.