“அமேசான் காட்டுக்கு தீவைத்தது டைட்டானிக் பட கதாநாயகன்” - பிரேசில் அதிபர் குற்றச்சாட்டு

அமேசான் காட்டுக்கு தீவைத்தது டைட்டானிக் பட கதாநாயகன்தான் என பிரேசில் அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.
Published on

பிரேசிலியா,

உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் மழைக்காடுகளில் கடந்த ஆகஸ்டு மாதம் மிகப்பெரிய அளவில் காட்டுத்தீ ஏற்பட்டது. முன்எப்போதும் நிகழாத வகையில் ஒரே சமயத்தில் ஆயிரம் இடங்களில் தீப்பற்றி எரிந்ததால் இது உலக அளவில் கவனம் ஈர்த்தது.

சர்வதேச தலைவர்கள், பல்வேறு நாடுகளை சேர்ந்த நடிகர், நடிகைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அமேசான் காட்டுத்தீ குறித்து கவலை தெரிவித்தனர். டைட்டானிக் படத்தில் நடித்து புகழ்பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான லியாண்டோ டிகாப்ரியோ இது பற்றி கவலை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் காட்டுத்தீயை அணைக்க 5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.36 ஆயிரம் கோடி) நிதி வழங்குவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் அமேசான் காட்டுத்தீ குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ ஹாலிவுட் நடிகர் லியாண்டோ டிகாப்ரியோதான் அமேசான் மழைக்காடுகளுக்கு தீவைக்க பணம் கொடுத்தார் என குற்றம் சாட்டினார். எனினும் அவர் இதற்கு எந்தவித ஆதாரங்களையும் வழங்கவில்லை. இந்த குற்றச்சாட்டை லியாண்டோ டிகாப்ரியோ மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், அமேசான் பகுதியில் பிரச்சினை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில், தங்களது இயற்கை வளத்தையும் பாரம்பரிய கலாசாரத்தையும் பாதுகாக்க போராடும் பிரேசில் மக்களுக்கு எனது ஆதரவை தெரிவிக்கிறேன். ஆதரவு தெரிவிக்கும் நேரத்தில், அமைப்புகளுக்கு நாங்கள் பண உதவி செய்வது கிடையாது. பிரேசில் மக்களின் எதிர்காலத்திற்காக அமேசானை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், கல்வியாளர்களுக்கு நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன் என தெரிவித்துள்ளார்.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com