லஞ்சம் வாங்கிய ஏட்டு கைதான விவகாரம்: வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு

லஞ்சம் வாங்கிய ஏட்டு கைதான விவகாரத்தில், வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Published on

நொய்யல்,

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே தவுட்டுப்பாளையத்தில் கடந்த மாதம் (பிப்ரவரி) 16-ந்தேதி கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் மாணிக்கவல்லி என்பவர் இறந்தார். இது தொடர்பாக வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்தநிலையில் மாணிக்கவல்லி வந்த கார் மீது மோதிய மற்றொரு காரை ஓட்டி வந்த நாமக்கல்லை சேர்ந்த டிரைவர் ராஜசேகரனை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து ராஜசேகரனை ஜாமீனில் விடுவிக்க காரின் உரிமையாளர் சேலத்தை சேர்ந்த அபிஷேக்மாறன், வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த போலீஸ் ஏட்டு செந்தில்குமார் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அபிஷேக்மாறன், இது தொடர்பாக கரூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் ஆலோசனையின் பேரில், கடந்த மாதம் 26-ந்தேதி வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போலீஸ் ஏட்டு செந்தில்குமாரிடம், ரசாயன பவுடர் தடவிய ரூ.15 ஆயிரத்தை அபிஷேக்மாறன் கொடுத்தார். அதனை ஏட்டு செந்தில்குமார் வாங்கியபோது, அங்கு மறைந்து இருந்த கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏட்டு செந்தில்குமாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இன்ஸ்பெக்டர் மீது வழக்கு

இந்த விவகாரத்தில், விபத்துக்குள்ளான காரை மோட்டார் வாகன ஆய்வுக்கு அனுப்புவதற்காக வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும், அபிஷேக்மாறன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் ஏட்டு செந்தில்குமார் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும், சென்னை ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு இயக்குனருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் நடவடிக்கை எடுப்போம் எனவும் கரூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com