‘ஜெட்’ வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை.. இதுதான் காரணமா..?

தங்கம் விலை நேற்று ஒரே நாளில் 2 முறை ஏற்றம் கண்டு, வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது.
சென்னை,
தங்கம் விலை கடந்த மாதம் (டிசம்பர்) 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது. அதன் பின்னர் விலை குறைந்த நிலையில், அதே மாதம் 22-ந்தேதியில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் பயணித்தது. கடந்த மாதம் 28-ந்தேதி புதிய உச்சத்தை தொட்டு, பிறகு விறுவிறுவென இறங்கியது. அப்படியாக விலை குறைந்து வந்து, கடந்த ஒரு வாரமாக மீண்டும் ஏற்றத்திலேயே தங்கம் விலை இருந்து வருகிறது.
அந்த வரிசையில் நேற்றும் விலை உயர்ந்து இருந்தது. தங்கம் விலையை பொறுத்தவரையில், நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 450-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.160-ம், சவரனுக்கு ரூ.1,280-ம் உயர்ந்திருந்தது. பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.290-ம், சவரனுக்கு ரூ.2,320-ம் அதிகரித்தது.
ஆக நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.450-ம், சவரனுக்கு ரூ.3,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 200-க்கும் விற்கப்பட்டது. இதன் மூலம் தங்கம் இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருந்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.730-ம், சவரனுக்கு ரூ.5,840-ம் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலை போலவே வெள்ளி விலையும் தினமும் தாறுமாறாக அதிகரிக்கிறது. நேற்று காலையில் கிராமுக்கு ரூ.12-ம், கிலோவுக்கு ரூ.12 ஆயிரமும், பிற்பகலில் கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் என ஒரே நாளில் கிராமுக்கு ரூ.22-ம், கிலோவுக்கு ரூ.22 ஆயிரமும் எகிறி, ஒரு கிராம் ரூ.340-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.
வெள்ளி விலை இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு கிலோ ரூ.3.5 லட்சத்தை தாண்டிவிடும் என கணிக்கப்பட்டு வந்த நிலையில், அது இந்த மாதம் இறுதிக்குள்ளாகவே அந்த நிலையை எட்டிவிடும் என்றே சொல்லப்படுகிறது.
தங்கம் விலை
இந்நிலையில் இன்று தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,800 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.350 அதிகரித்து. ஒரு கிராம் ரூ.14,250-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொறுத்தவரையில் விலை மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி ஒரு கிலோ வெள்ளி ரூ.3,40,000-க்கும், ஒரு கிராம் ரூ.340-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம், வெள்ளி விலை உயர்வுக்கு என்ன காரணம்..?
தங்கம், வெள்ளி விலை உயர்வுக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், இந்திய பங்குச்சந்தை சரிவு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. பொருளாதார ரீதியாக தங்கம் விலைக்கும், பங்குச் சந்தைக்கும் இடையே ஒரு தலைகீழ் தொடர்பு இருக்கிறது. பங்குச்சந்தை சரியும்போது தங்கம் விலை உயரும். பங்கு சந்தையின் தொடர் சரிவு ஏற்பட்டதால், அதில் இருந்து பணத்தை எடுத்து தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யத் தொடங்கிவிட்டார்கள்.
அந்த வகையில் நேற்று பங்குச்சந்தை புள்ளி விவரங்கள் சிவப்பு நிறத்தில் மாறி, தங்கம், வெள்ளியை மின்னச் செய்துவிட்டதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர். மேலும், சர்வதேச வர்த்தக போரினால், சர்வதேச சந்தையில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு, இந்திய சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறுவது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட சில காரணங்களும் தங்கம், வெள்ளி விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
தேதி | தங்கம் | | வெள்ளி | |
| 1 கிராம் | 1 சவரன் | 1 கிராம் | 1 கிலோ |
21-01-2026 | ரூ.14,250 | ரூ.1,14,000 | ரூ.340 | ரூ.3,40,000 |
20-01-2026 | ரூ.13,900 | ரூ.1,11,200 | ரூ.340 | ரூ.3,40,000 |
19-01-2026 | ரூ.13,450 | ரூ.1,07,600 | ரூ.318 | ரூ.3,18,000 |
18-01-2026 | ரூ.13,280 | ரூ.1,06,240 | ரூ.310 | ரூ.3,10,000 |
17-01-2026 | ரூ.13,280 | ரூ.1,06,240 | ரூ.310 | ரூ.3,10,000 |






