தங்கம் விலை மேலும் குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன..?

கோப்புப்படம்
நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,360 குறைந்த நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை கடந்த ஒரு மாதமாக ‘கிடுகிடு’வென உயர்ந்து வந்தது. தினமும் புதிய உச்சத்தை கடந்த வண்ணமே விலை பயணம் ஆனது. தங்கத்தை பொறுத்தவரையில், கடந்த 28-ந்தேதி ஒரு சவரன் ரூ.1,04,800-க்கு விற்பனை ஆனது புதிய உச்சமாக பார்க்கப்பட்டது.
அதேபோல் வெள்ளி விலை கடந்த 27-ந்தேதி ஒரே நாளில் கிராமுக்கு ரூ.31-ம், கிலோவுக்கு ரூ.31 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.285-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 85 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது இதுவரை இல்லாத உச்சமாக இருந்தது. இப்படியே விலை உயர்ந்து கொண்டே போனால் என்ன செய்வது? என்று புலம்பும் நிலைக்கு மக்களை கொண்டு சென்றுவிட்டது.
கொஞ்சமாவது விலை குறையாதா? என பார்த்து கொண்டிருந்த நேரத்தில் நேற்று தங்கம், வெள்ளி விலை இரண்டுமே அதிரடியாக சரிந்து இல்லத்தரசிகள், மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. அதன்படி நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.420-ம், சவரனுக்கு ரூ.3,360-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.12,600-க்கும், ஒரு சவரன் ரூ.1,00,800-க்கும் விற்பனையானது.
வெள்ளி விலையும் நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.23-ம், கிலோவுக்கு ரூ.23 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.258-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 58 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.12,550-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.258-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 58 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.






