பொக்லைன் எந்திரம் மூலம் மணல் திட்டுகளை தூர்வாரும் பணி தீவிரம்

அடையாறு நடு ஆற்றில் உள்ள மணல் திட்டுகளை அகற்ற மிதவை படகில் சென்று பொக்லைன் எந்திரம் மூலம் தண்ணீரின் ஓட்டத்தை சீர் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
Published on

காஞ்சீபுரம் ,

காஞ்சீபுரம் மாவட்டம் ஆதனூர் ஏரியில் இருந்து வரதராஜபுரம், திருநீர்மலை, அனகாபுத்தூர், நந்தம்பாக்கம், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளின் வழியாக 42 கிலோ மீட்டர் பயணித்து வங்க கடலில் அடையாறு ஆற்று தண்ணீர் கலக்கிறது.

இதுதவிர நந்திவரம், கூடுவாஞ்சேரி, மணிமங்கலம், படப்பை மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் வழிந்தோடி அடையாறு ஆற்றில் கலக்கிறது. சென்னை மாநகரத்தில் உள்ள நான்கு மிகப்பெரிய மழைநீர் வடிகால்களில் அடையாறு ஒன்றாகும்.

அடையாறு ஆற்றினை மீட்டெடுக்கும் பணியின் ஒரு பகுதியாக, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை நிதியின் கீழ் ரூ.94.76 கோடி செலவில் பொதுப்பணித்துறை மூலம் திருநீர்மலை பாலம் முதல் அடையாறு முகத்துவாரம் வரை 25 கிலோ மீட்டர் நீளத்திற்கு அடையாறு ஆற்றினை தூர்வாருதல் பணி நடக்கிறது.

இதன் மூலம் சுமார் 11 ஆயிரத்து 400 ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ஆற்றினை அகலப்படுத்துதல், ஆற்றின் இருபகுதியிலும் வெள்ளத்தடுப்பு அமைத்தல், பாதிப்புக்குள்ளான பகுதிகளில் 1,800 மீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் வெள்ளத்தடுப்பு சுவர் அமைத்தல் மற்றும் 8 முகத்துவாரங்கள் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் பெய்யும் மழையால் அடையாறு, திரு.வி.க. பாலம் அருகே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த பகுதியில் நீர் ஓட்டத்தை தடுக்கும் மணல் திட்டுகளை நடு ஆற்றில் மிதவை படகுகளில் சென்று பொக்லைன் எந்திரம் மூலம் சீர் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இது ஒரு புறம் இருக்க, ஏற்கனவே 20 பொக்லைன் எந்திரங்கள் மூலம் தூர்வாரப்பட்டு, மணல்கள் குவியலாக ஆற்றின் ஓரத்தில் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இவற்றை இரவில் லாரிகள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டும் வருகிறது.

இதேபோன்று திரு.வி.க. பாலத்தின் ஓரத்தில் ஆகாய தாமரைகள் அதிகம் படர்ந்து காணப்படுகிறது. இதனால் ஒரு குறிப்பிட்ட பகுதியில் முகத்துவாரத்திற்கு தண்ணீர் வடிந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இவற்றை அப்புறப்படுத்தினால் மழை தண்ணீர் ஓடுவதற்கு வசதியாக இருக்கும் என்பதால் இவற்றை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com