1,000 படுக்கைகளுடன் காஞ்சீபுரத்தில் ரூ.118 கோடியில் புற்றுநோய் சிகிச்சை கட்டிடம் - எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

காஞ்சீபுரம் மாவட்டம் காரப்பேட்டை அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் ரூ.118 கோடி செலவில் ஆயிரம் படுக்கையுடன் ஒப்புயர்வு மையக் கட்டிடம் கட்டுவதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டின் கீழ், இயங்கி வரும் பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகத்திற்கு கட்டப்பட்டுள்ள புதிய அலுவலக கட்டிடத்தை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதன்மூலம், பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் ஆகிய வட்டங்களில் உள்ள 846 கிராமங்களை சேர்ந்த சுமார் 3.4 லட்சம் மக்கள், வட்டார போக்குவரத்து அலுவலகம் தொடர்பான பணிகளை சிரமமின்றி பெற்று பயனடைவார்கள்.

சேமிப்பு கிடங்குகளை அதிகரித்து உணவு தானியங்களை முறையாக சேமித்து வைக்கும் கிடங்குகளின் கொள்ளளவை உயர்த்தும் வகையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக புதிதாக கூடுதல் கிடங்குகள் கட்டப்படும் என்று சட்டசபையில் பேரவை விதி 110-ன் கீழ் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

அதன்படி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் திருவாரூர் மாவட்டம் கோவிலூர் கிராமத்தில் தலா 5 ஆயிரம் டன் கொள்ளளவுடன் மொத்தம் 60 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட 12 சேமிப்பு கிடங்குகள், கடலூர் மாவட்டம் வேப்பூரில் தலா ஆயிரம் டன் கொள்ளளவுடன் மொத்தம் 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்பு கிடங்குகள், புதுக்கோட்டை மாவட்டம் எழுநூற்றிமங்களத்தில் 1,500 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு, கூட்டுறவுத் துறை சார்பில் மதுரையில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு அலுவலக வளாகக் கட்டிடம் என மொத்தம் ரூ.74.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 15 சேமிப்பு கிடங்குகள் மற்றும் ஒருங்கிணைந்த கூட்டுறவு அலுவலக வளாக கட்டிடத்தை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 30 பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு அவர்களின் கல்வி தகுதியின் அடிப்படையில் பட்டியல் எழுத்தர், அலுவலக உதவியாளர், எடையாளர், காவலர் மற்றும் துப்புரவாளர் ஆகிய பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 4 வாரிசுதாரர்களுக்கு ஆணைகளை அவர் வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டம் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையம், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள செவிலியர் பயிற்சிப் பள்ளிக் கட்டிடம் மற்றும் அதன் மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள தீக்காய சிகிச்சைப் பிரிவு கட்டிடம், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள தீக்காய சிகிச்சைப் பிரிவு கட்டிடம் என மொத்தம் ரூ.24.21 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டிடங்களை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

2019-ம் ஆண்டு ஜூலை 17-ந் தேதியன் சட்டசபையில் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில் காஞ்சீபுரம் மாவட்டம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் புற்றுநோய்க்கான ஒப்புயர்வு மையம் ஒன்று ஏற்படுத்தப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி, காஞ்சீபுரம் மாவட்டம் காரப்பேட்டை அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் ரூ.118.46 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய ஒப்புயர்வு மையக் கட்டிடம் மற்றும் தஞ்சாவூர், அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் கட்டப்படவுள்ள புதிய கண் சிகிச்சை பிரிவு கட்டிடம் ஆகியவற்றுக்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com