கார் மோதி கல்லூரி மாணவி பலி: ஆடிட்டர் உள்பட 2 பேருக்கு 7 ஆண்டு சிறை - தஞ்சை கோர்ட்டு தீர்ப்பு

கார் மோதி கல்லூரி மாணவி பலியான வழக்கில் ஆடிட்டர் உள்பட 2 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
கார் மோதி கல்லூரி மாணவி பலி: ஆடிட்டர் உள்பட 2 பேருக்கு 7 ஆண்டு சிறை - தஞ்சை கோர்ட்டு தீர்ப்பு
Published on

தஞ்சாவூர்,

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி செல்வி நகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மேகநாதன். இவருடைய மகள் புஷ்பவள்ளி(வயது 18). இவர், தஞ்சையில் உள்ள குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் 2013-ம் ஆண்டில் முதலாமாண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் பொன்பரப்பி சிறுகளத்தூரை சேர்ந்த கொடியரசு மகள் ஜெயந்தி(18) பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர்கள் தஞ்சை கண்ணன் நகரில் தங்கி இருந்து படித்து வந்தனர். கடந்த 18-2013 அன்று இவர்கள் சாப்பிடுவதற்காக கல்லூரி அருகே உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய மைதானம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த மைதானத்தில் கார் பழகிக்கொண்டிருந்த இருவர், அதிவேகமாக காரை ஓட்டி வந்து அவர்கள் மீது மோதினர். இதில் படுகாயம் அடைந்த புஷ்பவள்ளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த ஜெயந்தி தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து தஞ்சை நகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டி பழகிய தஞ்சை புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஜெகதீசன் மகன் பிரபாகரன்(41) மற்றும் நாஞ்சிக்கோட்டை சாலை கல்யாணசுந்தரம் நகரை சேர்ந்த கண்ணன்(49) ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிரபாகரன், கூட்டுறவு துறையில் முதுநிலை ஆடிட்டராக பணியாற்றி வந்தார்.

இந்த வழக்கு தஞ்சை கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி ஜி.என்.சரவணக்குமார் விசாரித்து பிரபாகரன், கண்ணன் ஆகியோருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கே.ரமேஷ் ஆஜரானார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com