எளம்பலூர் பிரம்மரி‌ஷி மலையில் கார்த்திகை மகா தீபவிழா

எளம்பலூர் பிரம்மரி‌ஷி மலையில் கார்த்திகை மகா தீபவிழா நடைபெற்றது.
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூரை அடுத்த எளம்பலூரில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் மலை உச்சியில் கார்த்திகை மகா தீபத்தையொட்டி 300 லிட்டர் தூய்மையான பசுநெய், 300 மீட்டர் திரி மற்றும் 210 கிலோ பூங்கற்பூரம் கொண்டு கொங்கணர் தூண் அருகே மகாதீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை மகா தீபத்தை முன்னிட்டு நேற்று காலை மலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீகாகன்னை ஈஸ்வரர் கோவிலில் கோமாதா பூஜையும், அஸ்வ பூஜையும், 210 சித்தர்கள் யாகமும் நடத்தப்பட்டது. மகா தீபத்திற்காக மஞ்சள் தடவி தயார் செய்யப்பட்ட 300 மீட்டர் திரி மற்றும் கொப்பரை நேற்று காலை பெரம்பலூரில் உள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு திரி மற்றும் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்பு குதிரைகள் பூட்டி சாரட் வண்டியில் வைத்து ஊர்வலமாக எளம்பலூர் மலை அடிவாரத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. மாலை 6 மணிக்கு மலை உச்சியில் சதுரகிரி சாதுக்கள் திருக்கூட்டத்தலைவர் செந்தில்சுவாமி, இளம்தவயோகி தவசிநாதன் ஆகியோர் மகாதீபத்தை ஏற்றிவைத்தனர். மேலும் சொக்கப்பனையும் கொளுத்தபட்டது. மலை அடி வாரத்தில் காகன்னை ஈஸ்வரர் கோவிலிலும் மகாதீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

சொக்கப்பனை

விழாவில் திரைப்பட இயக்குனர் யார்கண்ணன், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷாபார்த்திபன், மாவட்ட நீதிபதிகள் கருணாநிதி, பெரம்பலூர் மாவட்ட பொறுப்பு நீதிபதி மலர்விழி, லேக்அதாலத் நீதிபதி கருணாநிதி, இலங்கை ராதா மாதாஜி, பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்ரமணியன், சிவசேனா மாநில கொள்கை பரப்பு செயலாளர் சசிகுமார், பெரம்பலூர் மாவட்ட சன்மார்க்க சங்க தலைவர் வழக்கறிஞர் சுந்தர்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மகாசித்தர்கள் அறக்கட்டளை ரோகிணிமாதாஜி, இளம்தவயோகி சுந்தரமகாலிங்கம் உள்பட பலர் செய்திருந்தனர். மேலும் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் மதனகோபாலசுவாமி கோவில் மற்றும் எளம்பலூர் சாலையில் உள்ள பாலமுருகன் கோவில், புறநகர் பஸ்நிலையம் அருகே உள்ள முத்துகுமாரசுவாமி கோவில் உள்பட முருகன் கோவில்களில் நேற்று மாலை கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் அருகே கார்த்திகை தீபத்தையொட்டி நேற்று இரவு சொக்கப்பனை (சுடலை) கொளுத்தப்பட்டது. இதேபோலமதனகோபாலசுவாமி கோவில் அருகே சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.கார்த்திகை தீபத்தையொட்டி பெரம்பலூரில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் கார்த்திகை தீபங்களை வீடுமுழுவதும் ஏற்றி வைத்து வழிபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com