நகைக்கடையில் கர்நாடக போலீசார் திடீர் சோதனையிட்டதால் பரபரப்பு

திருட்டு நகை வாங்கியதாக கூறி திருவண்ணாமலை நகைக்கடையில் கர்நாடக மாநில போலீசார் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Published on

திருவண்ணாமலை,

பெங்களூரு வில்சன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் சிவா. நகை திருட்டு சம்பவம் தொடர்பாக இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரு போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் கர்நாடக மாநிலத்தில் பல்வேறு பகுதியில் நகை திருட்டில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். இவரை காவலில் எடுத்து பேகூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சுமார் 1 கிலோ எடையுள்ள நகைகளை திருவண்ணாமலை சன்னதி தெருவில் உள்ள ஒரு நகைக் கடையில் விற்றதாக போலீசாரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து நேற்று கர்நாடக போலீசார் திருவண்ணாமலைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் திருவண்ணாமலை சன்னதி தெருவில் உள்ள நகைக் கடையில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடை உரிமையாளர், சோதனை குறித்து கர்நாடக போலீசாரிடம் கேட்டு உள்ளனர். அப்போது போலீசார், நீங்கள் திருட்டு நகை வாங்கி உள்ளர்கள் என்று தெரிவித்து உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர், நான் யாரிடமும் திருட்டு நகை வாங்கவில்லை என்று கூறி, கர்நாடக போலீசார் சோதனையிட தடுத்து உள்ளார். மேலும் கடையில் சோதனை நடத்துவதற்கான ஆணையை கடை உரிமையாளர் கேட்டு உள்ளார். ஆனால் அதனை கர்நாடக போலீசார் கொடுக்க மறுத்து உள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த மற்ற நகைக்கடைகளின் உரிமையாளர்கள், அடகுக் கடை உரிமையாளர்கள் அங்கு திரண்டனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு திருவண்ணாமலை டவுன் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். பின்னர் திருவண்ணாமலை போலீசார், கர்நாடக போலீசாரிடம் நீங்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்து முறையாக அனுமதி பெற்று உள்ளூர் போலீசாருடன் தான் வந்து சோதனை நடத்த வேண்டும். யாரிடமும் தெரிவிக்காமல் நீங்களாக வந்து சோதனை நடத்துவது தவறு என்று கூறியுள்ளனர்.

இது குறித்து முன்பே உங்கள் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் தகவல் தெரிவித்து தான் நாங்கள் சோதனை நடத்துவதாக கர்நாடக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி கொள்ளுங்கள் என்று திருவண்ணாமலை டவுன் போலீசார், கர்நாடக போலீசாரை அழைத்தனர். ஆனால் கர்நாடக போலீசார் அந்த நகைக் கடையில் இருந்த வெளியே வரமாட்டோம் என்று கூறினர்.

உள்ளூர் போலீசார் அழைத்தும் வெளியே வர மறுத்த கர்நாடக போலீசாரை கண்டித்து நகைக் கடை உரிமையாளர்கள் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அதனை தொடர்ந்து கர்நாடக போலீசார் கடையில் இருந்து வெளியேறி திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். கர்நாடக போலீசாரிடம் உரிய ஆவணங்களுடன் வந்து நீதிமன்ற உத்தரவின் படி விசாரணை நடத்துங்கள் என்று திருவண்ணாமலை டவுன் போலீசார், கர்நாடக போலீசாரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து கர்நாடக போலீசார் திருவண்ணாமலையில் இருந்து திரும்பி சென்றனர்.

இதனால் நேற்று திருவண்ணாமலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com