மும்பை,
இந்திய அரசியல் வரலாற்றில் வெளியுலகுக்கு தெரியாமல் முதல்-மந்திரியாகவும், துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்று ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர்கள் பாரதீய ஜனதாவின் தேவேந்திர பட்னாவிசும், தேசியவாத காங்கிரசின் அஜித்பவாரும் ஆவர். ஒரே இரவில் நடந்த அந்த ரகசிய நடவடிக்கை மூலம் அரியணை ஏறிய அவர்களின் இந்த அரசியல் விளையாட்டு 80 மணி நேரத்தில் முடிந்து போனது.
தற்போது தேவேந்திர பட்னாவிஸ் மராட்டிய சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகி விட்டார். தேசியவாத காங்கிரசுக்கு மீண்டும் திரும்பிவிட்ட அஜித்பவார் தற்போதைய சிவசேனா தலைமையிலான மகா விகாஷ் முன்னணி அரசில் துணை முதல்-மந்திரி பதவிக்கான போட்டியிலும் உள்ளார்.
இந்தநிலையில், நேற்றுமுன்தினம் தேவேந்திர பட்னாவிசும், அஜித்பவாரும் ஒரே மேடையில் தோன்றி மராட்டிய மக்களுக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்தனர். சோலாப்பூரில் நடந்த சஞ்சய் ஷிண்டே எம்.எல்.ஏ.வின் மகள் திருமணத்தில் தான் இருவரும் அருகருகே அமர்ந்து, 20 நிமிடங்கள் வரை பேசி கொண்டு இருந்தனர்.
அரசியல் ஆச்சரியத்துக்கு வித்திட்ட அவர்கள் இருவரின் மீதும் தான் திருமணத்திற்கு வந்திருந்த அனைவரது பார்வையும் இருந்தது. பின்னர் இதுபற்றி நிருபர்கள் அஜித்பவாரிடம் கேட்டதற்கு, திருமண நிகழ்ச்சியில் எங்களுக்கு அருகருகே இருக்கை போடப்பட்டு இருந்ததால் நாங்கள் ஒன்றாக அமர்ந்து இருந்தோம். புதிதாக எதையோ செய்ய போகிறோம் என்பது இதற்கு அர்த்தம் அல்ல. அரசியலில் நிரந்தர எதிரி என்று யாரும் இல்லை. நாங்கள் இருவரும் வானிலை மற்றும் மழைப்பொழிவு பற்றி பேசிக்கொண்டு இருந்தோம் என்று நகைச்சுவையாக கூறிவிட்டு சென்றார்.