அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி மீது சி.பி.ஐ. வழக்கு பதியலாம் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அனுமதி

அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி மீது சி.பி.ஐ. வழக்கு பதியலாம் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.
அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி மீது சி.பி.ஐ. வழக்கு பதியலாம் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அனுமதி
Published on

புதுடெல்லி,

அலகாபாத் ஐகோர்ட்டின் தற்போதைய நீதிபதி எஸ்.என்.சுக்லாவுக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவதற்கு சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அனுமதி வழங்கினார்.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறும் விதமாக அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.என்.சுக்லா தனியார் மருத்துவக்கல்லூரி ஒன்றுக்கு மாணவர் சேர்க்கை விவகாரத்தில் சாதகமாக செயல்பட்டார் என்று உத்தரபிரதேச மாநில அட்வகேட் ஜெனரல் ராகவேந்திர சிங், சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு புகார் கடிதம் அனுப்பி இருந்தார்.

அக்கடிதத்தின் மீது மூன்று முன்னாள் தலைமை நீதிபதிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அந்த குழு நீதிபதி சுக்லா குறிப்பிட்ட மருத்துவக்கல்லூரிக்கு சாதகமாக செயல்பட்டதை உறுதி செய்தது.

நீதிபதிகள் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் நீதிபதி சுக்லா பதவி விலகலாம் அல்லது விருப்ப ஓய்வு பெற்றுக் கொள்ளலாம் என்று அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் ஆலோசனையை அலகாபாத் ஐகோர்ட்டு ஏற்கவில்லை. தலைமை நீதிபதி முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்ற நீதிபதி சுக்லாவின் கோரிக்கையும் மறுக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி சுக்லாவை பதவி நீக்கம் செய்வதற்கு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.

இந்நிலையில் நேற்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இது தொடர்பாக சி.பி.ஐ. தனக்கு அனுப்பிய கடிதத்தை பரிசீலனை செய்து நீதிபதி எஸ்.என்.சுக்லா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவதற்கு அனுமதி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com