பணியின்போது செல்போன் பேச்சை தவிருங்கள் போக்குவரத்து போலீசாருக்கு கவர்னர் கிரண்பெடி அறிவுரை

பணியின்போது செல்போன் பேசுவதை தவிருங்கள் என்று போக்குவரத்து போலீசாருக்கு கவர்னர் கிரண்பெடி அறிவுரை வழங்கினார்.
Published on

புதுச்சேரி,

புதுவையில் இருக்கும் போது வார விடுமுறை நாட்களில் நீர்நிலைகள் ஆய்வு மற்றும் வளர்ச்சிப்பணிகளில் கவர்னர் கிரண்பெடி ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த சில வாரங்களாக காவல்துறையின் பக்கம் அவரது பார்வை திரும்பியுள்ளது. ஏதாவது ஒரு காவல்நிலையத்தில் ஆய்வுக்கு செல்வது, அறிவுரை வழங்குவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று நேரு வீதியில் உள்ள போக்குவரத்து காவல்நிலையத்துக்கு சென்ற கிரண்பெடி அங்கு ஆய்வில் ஈடுபட்டார்.

அறிவுரை

நாள்தோறும் பதிவு செய்யப்படும் வழக்குகள், விசாரணை விவரங்கள், அபராதங்கள் குறித்து அவர் கேட்டறிந்தார். அப்போது போக்குவரத்து போலீசாருக்கு சில அறிவுரைகளை வழங்கினார். போலீசாரிடம் கவர்னர் கிரண்பெடி கூறியதாவது:-

சிக்னல்களில் பணியில் இருக்கும்போது செல்போன்களில் பேசுவதை போலீசார் தவிர்க்க வேண்டும். ஆனால் அத்தியாவசிய தேவைக்காக செல்போன் பயன்படுத்துவதில் தவறில்லை.

போக்குவரத்து போலீசாரும் ரோந்து செல்லவேண்டும். அப்போது காணும் பிரச்சினைகள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். சாலை பாதுகாப்பினை உறுதி செய்ய மோட்டார் வாகன விதிகளை அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பீட் புத்தகம்

இதன்பின் போக்குவரத்து போலீசாரிடம் தங்களது பீட் (ரோந்து) புத்தகத்தை கேட்டார். ஆனால் அப்போது பீட் புத்தகம் யாரிடமும் இல்லை. ஒரே ஒரு பெண் போலீஸ் கையில் வைத்திருந்த பீட் புத்தகத்தை கொடுத்தார். அதை கவர்னர் கிரண்பெடி வாங்கி பார்த்தார். ஆனால் அதில் எந்த விதமான தகவல்களும் இல்லை. ஒரு சில செல்போன் நம்பர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டு இருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த கவர்னர் பீட் புத்தகத்தின் அவசியம் குறித்து அவர்களிடம் விளக்கினார். அதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயங்கள் குறித்தும் அறிவுறுத்தினார்.

குற்ற சம்பவங்கள் தொடர்பாக படம் பிடிக்கவேண்டியதை செய்து காட்டுமாறும் அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து போலீசார் கவர்னர் முன்பாகவே வீடியோ பதிவுகளை செய்தனர். இதையடுத்து கவர்னருடன் சேர்ந்து போலீசார் செல்பி எடுத்துக்கொண்டனர்.

போலீஸ் பயிற்சி பள்ளி கூட்ட அரங்கில் பீட் போலீசாரை கவர்னர் சந்தித்து பேசினார். அப்போது ரோந்து பணி தொடர்பாக அவர்களுக்கு தேர்வு நடத்தினார்.

குற்றவாளிகள் கண்காணிப்பு

அப்போது கிரண்பெடி கூறும்போது, ரோந்து போலீசார் குற்றங்களை தடுக்கும் விதமாக செயல்பட வேண்டும், மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக இருக்கவேண்டும். முன்னாள் குற்றவாளிகள் குற்றங்களில் ஈடுபடுகிறார்களா? என்பதை கண்காணிப்பது அவசியம் என்று அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது கவர்னரின் கூடுதல் செயலாளர் சுந்தரேசன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் ராகுல் அல்வால், அகன்ஷா யாதவ், போலீஸ் சூப்பிரண்டுகள் மாறன், முருகவேலு, ரச்சனாசிங் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com