தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது - தாராபுரத்தில் வைகோ பேச்சு

தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்று தாராபுரத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
Published on

தாராபுரம்,

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. சார்பில் கணேசமூர்த்தி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தாராபுரத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திறந்த வேனில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்த பகுதியிலே பல மதத்தினர் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள் என்கிற செய்தியை கேட்டபோது எனக்குள் மகிழ்ச்சி ததும்புகிறது. கோவையிலே பேசிய பிரதமர் நரேந்திரமோடி மிகுந்த ஆபத்தான கருத்துகளை சொல்லி உள்ளார். இந்த பேச்சு எனக்கு நீண்ட அச்சம் மூட்டுகிறது. இனி இவர் கையில் அதிகாரம் வந்தால் இந்தியா என்ன ஆகுமோ? என்கிற அச்சம் என்னை மிகவும் வாட்டிவதைக்கிறது.

இந்த 5 ஆண்டு காலத்தில் மதசார்பின்மையை பற்றி பேசிய எத்தனைபேர் படுகொலை செய்யப்பட்டார்கள். ஒரு சம்பவத்திற்காவது பிரதமர் கண்டனம் தெரிவித்ததுண்டா? வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்தற்காக தெருவில் இழுத்துப்போட்டு அடித்து கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

இந்து, முஸ்லிம் ஒற்றுமையாக வாழ்கிற அலிகாரில் காந்தியை சுட்டுக்கொல்கிறோம் என்று அறிவித்துவிட்டு, ஒரு நிகழ்ச்சியை நடத்தினீர்கள். காந்திபோல ஒரு உருவத்தை கொண்டு வந்து, இந்துமகா சபையின் தலைவர் அதை சுட்டார். சுட்டவுடன் அந்த உருவத்திலிருந்து ரத்தம் வருவதுபோல் செய்திருந்தார்கள். பிறகு அதை கீழே தள்ளினர். காலால் மிதித்தார்கள், நெருப்பு வைத்தனர். காந்தியை சுட்டுக் கொன்றோம். கோட்சேவுக்கு இந்தியா பூராவும் சிலை வைப்போம் என்று சொன்ன செய்தி, வெளிநாடுகளுக்குப் போனபோது உலகநாடுகளின் தலைவர்கள் உள்ளத்தை எல்லாம் உலுக்கியதே. பிரதமர் அவர்களே நீங்கள் கண்டனம் தெரிவித்தீர்களா? உங்கள் மனம் பதறவில்லையா? உங்கள் உள்ளத்தில் ஈவு, இரக்கம் எதுவுமே கிடையாதா?

இன்றைக்கு வியாபாரிகளின் வாழ்வு சிதைந்து போய்விட்டது. தமிழகத்தில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டது. 5 லட்சம் பேர் வேலை இழந்திருக்கிறார்கள். வேலை இல்லா திண்டாட்டத்தை போக்க ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை ஏற்படுத்திக் கொடுப்பேன் என்று சொன்ன பிரதமர் அவர்களே 2 ஆயிரம் பேருக்காவது உங்களால் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடிந்ததா. 15 லட்சம் ரூபாய் உங்கள் வங்கி கணக்குகளுக்கு வந்து சேரும் என்று அறிவித்தீர்களே, 15 ரூபாயாவது வங்கிக் கணக்கில் சேர்த்தீர்களா? கியாஸ் சிலிண்டர் விலை 450 ரூபாயாக இருந்தது. இன்றைக்கு 950 ரூபாய்.

தி.மு.க. ஆட்சியில் தாராபுரத்தில் ரூ.18 கோடி மதிப்பில் புறவழிச்சாலை அமைத்து கொடுக்கப்பட்டது. அதேபோல் சர்கார்பதி என்கிற இடத்திலிருந்து திருமூர்த்தி அணை வரை தண்ணீர் கசிவு ஏற்படுகிறது என்கிற காரணத்திற்காக தரைமட்ட கால்வாய் கான்கிரீட் தளம் அமைத்து 186 கோடி ரூபாய் மதிப்பில் தி.மு.க. ஆட்சியில் அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதையும் நான் இங்கே நினைவூட்ட விரும்புகின்றேன்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம். கல்விக்கடன்களை தள்ளுபடி செய்வோம். 5 பவுன் வரை நகையை ஈடுவைத்து கடன் வாங்கிய ஏழை மக்களின் கண்ணீரை துடைக்க கடன்களை ரத்து செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதேபோல் ராகுல்காந்தியை பிரதமராக வரவேண்டும் என்று தி.மு.க. தலைவர் சுட்டிக்காட்டினாரே அவர் பன்முகத்தன்மையை ஏற்றுக் கொண்டிருக்கிற தலைவர். அதனால் தான் பறிக்கப்பட்ட மாநில உரிமைகள் மீண்டும் மாநிலங்களுக்கே கொடுக்கப்படும் என்கிறார். நரேந்திரமோடி பள்ளிக்கூடங்களில் சமஸ்கிருதத்தை திணிப்போம் என்கிறார். கல்விப்பட்டியலையே மாநிலங்களுக்கு தருவோம் என்று ராகுல்காந்தி சொல்கிறார். அதுமட்டுமல்ல ஏழ்மையில் வறுமையில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிற மக்களுக்கு மாதம் 6 ஆயிரம் வீதம் வருடத்திற்கு 72 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்படும் என்பதை அனைவரும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள்.

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜனதா அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. மேகதாது அணைக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று முடிஎடுத்துள்ளார்கள். மோகதாதுவில் அணைகட்டினால் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் கிடைக்காது. 25 லட்சம் ஏக்கர் நஞ்சை நிலம் அடியோடு பாழாகிவிடும். பழமையான நாகரீகத்தை கொண்ட தமிழினத்தை ஒழிக்க வேண்டும். அனைத்தையும் ஒற்றை தன்மையாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். பன்முக தன்மையை அழிக்க நினைத்தால், இந்தியாவின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும். இந்தியாவின் பாதுகாப்பை சொல்லி கோவையில் ஓட்டுக்கேட்டவர்கள், ரபேல் விவகாரத்தில் நாட்டின் பாதுகாப்பையே அடகு வைத்துவிட்டீர்கள். என்பதை மறந்துவிடாதீர்கள். இவர்கள் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் பலபேரை சுட்டுக்கொண்டார்கள். மறக்க முடியுமா?

இந்த அரசு தூக்கி எறியப்படவேண்டும். அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். மத்தியிலே மதசார்பின்மையை காக்கின்ற, ஜனநாயகத்தை காக்கின்ற அரசு வேண்டும். ஆபத்தில்லாத அரசு வேண்டும். அதற்கு நீங்கள் இந்த தொகுதியில் போட்டியிடும் கணேசமூர்த்திக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com