‘போக்சோ’ சட்ட புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்காக, ‘போக்சோ’ சட்ட புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.
Published on

புதுடெல்லி,

குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் (போக்சோ), கடந்த 2012-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை மேலும் கடுமையாக்கும்வகையில், சமீபத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த திருத்தங்களை உள்ளடக்கிய புதிய போக்சோ சட்ட விதிமுறைகளை மத்திய அரசு, அரசிதழில் வெளியிட்டுள்ளது. கடந்த 9-ந் தேதி அமலுக்கு வந்த அந்த விதிமுறைகளில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குழந்தைகளை பராமரிக்கும் காப்பகங்கள், குழந்தைகளுடன் அன்றாட தொடர்பு கொண்ட பள்ளிக்கூடங்கள், விளையாட்டு அமைப்புகள் உள்ளிட்ட எந்த நிறுவனமாக இருந்தாலும், அங்கு பணியாற்றும் ஒவ்வொரு ஊழியரின் பின்னணி குறித்து போலீஸ் மூலம் அவ்வப்போது சரிபார்க்க வேண்டும்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் ஆகியோருக்கு தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்காக, பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை பெற்ற நபர்கள் அல்லது அத்தகைய படங்கள் பரப்பப்படுவது குறித்து தகவல் அறிந்த நபர்கள் அதுபற்றி சிறப்பு சிறார் போலீஸ் பிரிவிடமோ அல்லது இணைய குற்றப்பிரிவிடமோ புகார் அளிக்க வேண்டும்.

அப்படி புகார் அளிக்கும்போது, எந்த சாதனத்தில் அத்தகைய படங்கள் பெறப்பட்டன என்றும், எந்த தளத்தில் அவை பரப்பப்படுகின்றன என்றும் தெரிவிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை சிறிதும் சகித்துக் கொள்ள மாட்டோம் என்ற அடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்பு கொள்கை ஒன்றை மாநில அரசுகள் வகுக்க வேண்டும். குழந்தைகளுடன் நேரடி தொடர்புடைய எல்லா நிறுவனங்களும் அந்த கொள்கையை பின்பற்ற வேண்டும்.

குழந்தைகளை கையாளும் பணியில் இருக்கும் நிரந்தர, ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றியும், போக்சோ சட்டப்படி அவர்களது பொறுப்பு பற்றியும் உணர்த்த பயிற்சி வகுப்புகளை மத்திய, மாநில அரசுகள் நடத்த வேண்டும்.

மேலும், குழந்தைகளுக்கு தங்கள் தனிப்பட்ட பாதுகாப்பு பற்றியும், பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வது பற்றியும், அத்தகைய குற்றங்களை தெரிவிப்பதற்கான குழந்தைகள் உதவி மைய கட்டணம் இல்லா தொலைபேசி எண் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த அவரவர் வயதுக்கேற்ற பாடத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் வகுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com