சென்னை,
வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக ஆங்காங்கே மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக வருகிற 6-ந்தேதி (புதன்கிழமை) வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதுரை, தென்காசி, தேனி, திண்டுக்கல், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளை (திங்கட்கிழமை) தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், சேலம், தர்மபுரி, ஈரோடு, கோவை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
அதேபோல், நாளை மறுதினமும்(செவ்வாய்க்கிழமை), அதற்கு அடுத்த நாளும்(புதன்கிழமை) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.