ஆப்கானிஸ்தானில் 5,000 தலீபான் கைதிகளை விடுவிக்க அதிபர் ஒப்புதல்

ஆப்கானிஸ்தானில் 5,000 தலீபான் கைதிகளை விடுவிக்க அந்நாட்டு அதிபர் அஷ்ரப்கனி ஒப்புதல் அளித்துள்ளார்.
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும், அந்த நாட்டு அரசுக்கும் இடையே 19 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சிறையில் உள்ள தலீபான் பயங்கரவாதிகள் 5,000 பேரை விடுவிக்க அதிபர் அஷ்ரப்கனி ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கான ஆணையில் நேற்று அவர் கையெழுத்திட்டார்.

முதற்கட்டமாக 1,500 கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், இதற்கான பணிகள் 14-ந் தேதி முதல் தொடங்கும் என்றும் அஷ்ரப் கனியின் செய்தி தொடர்பாளர் செதிக் கூறினார். ஒவ்வொரு நாளும் 100 கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.

மேலும் விடுவிக்கப்படும் அனைத்து கைதிகளும் போர்க்களத்திற்கு திரும்ப மாட்டோம் என்று எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மீதமுள்ள 3,500 கைதிகள் ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலீபான்கள் இடையிலான பேச்சுவார்த்தைகளின் போதும், அதற்கு பின்னரும் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டி, அமெரிக்க அரசு மற்றும் தலீபான் பயங்கரவாதிகளுக்கு இடையே வரலாற்று சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை சமீபத்தில் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com